சதம் விளாசிய டிரிஸ்டன் ஸ்டப்ஸ், டெம்பா பவுமா; இலங்கைக்கு 516 ரன்கள் இலக்கு!
மகாராஷ்டிரா:`பைக்கில் மோதாமலிருக்க முயன்று விபத்து' - அரசு பஸ் கவிழ்ந்து 11 பயணிகள் பலி
மகாராஷ்டிரா மாநிலம் கோண்டியாவில் இன்று அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானது. அரசு பஸ் நாக்பூரில் இருந்து கோண்டியாவிற்குப் புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தது.
பஸ்சில் 35 பயணிகள் இருந்தனர். சாலையில் சென்றபோது எதிர்பாராத விதமாக பஸ் முன்பு இருசக்கர வாகனம் ஒன்று வந்தது. அந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதாமல் அதனை முந்திச்செல்ல முயன்றபோது பஸ் சாலையில் இருந்து கீழே இறங்கியது.
20 அடி பள்ளத்தில் பஸ் விழுந்தது. பஸ் விபத்துக்குள்ளானதும் உள்ளே இருந்த பயணிகள் உதவி கேட்டுக் கத்தினர். உடனே கிராம மக்கள் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தீயணைப்புத் துறையினரும், போலீஸாரும் விரைந்து வந்து மீட்புப்பணியில் ஈடுபட்டனர். விபத்தில் சம்பவ இடத்திலேயே 8 பேர் உயிரிழந்தனர்.
காயத்துடன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டவர்களில் 3 பேர் உயிரிழந்தனர். இதனால் சாவு எண்ணிக்கை 11 ஆக அதிகரித்தது. சாவு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று போலீஸார் தெரிவித்தனர். தேவ்வா என்ற கிராமத்திற்கு அருகில் இந்த விபத்து நடந்ததாக போலீஸார் தெரிவித்தனர். 20க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு 10 லட்சம் வழங்கப்படும் என்று முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்தார்.