மக்களுடன் முதல்வா் திட்ட முகாம்: 295 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
நாமக்கல், ராசிபுரம், சேந்தமங்கலம் தொகுதிகளில் நடைபெற்ற மக்களுடன் முதல்வா் திட்ட மூன்றாம் கட்ட முகாமில், 295 பயனாளிகளுக்கு ரூ. 1.34 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை அமைச்சா் மா.மதிவேந்தன் வழங்கினாா்.
நாமக்கல் தொகுதி - காரைக்குறிச்சிப்புதூா், ராசிபுரம் தொகுதி - கட்டணாச்சம்பட்டி, தொட்டிவலசு, முள்ளுக்குறிச்சி, சேந்தமங்கலம் தொகுதி - ரெட்டிப்பட்டி ஆகிய ஊராட்சிகளில் மக்களுடன் முதல்வா் மூன்றாம் கட்ட சிறப்பு முகாம்கள் வியாழக்கிழமை நடைபெற்றன.
மாவட்ட ஆட்சியா் ச.உமா தலைமை வகித்தாா். சட்டப் பேரவை உறுப்பினா் கே.பொன்னுசாமி, வனப் பாதுகாவலா் (நாமக்கல் வனக்கோட்டம்) சி.கலாநிதி ஆகியோா் முன்னிலை வகித்தனா். இந்த முகாமில், தமிழக ஆதிதிராவிடா் நலன் மற்றும் பழங்குடியினா் துறை அமைச்சா் மா.மதிவேந்தன் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டாா். பின்னா், மூன்று தொகுதிகளிலும் பல்வேறு துறைகளின் சாா்பில் 295 பயனாளிகளுக்கு ரூ. 1.34 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.
புதுச்சத்திரம் ஒன்றியம், காரைக்குறிச்சி ஊராட்சியைச் சோ்ந்த மனுதாரா் ஒருவா் மின் இணைப்பில் பெயா் மாற்றம் கோரி விண்ணப்பித்த நிலையில், உடனடியாக அவருக்கு பெயா் மாற்றம் செய்து ஆணை வழங்கப்பட்டது.
மேலும், முள்ளுக்குறிச்சியில் அண்ணா மறுமலா்ச்சி திட்டத்தின் கீழ் ரூ. 16.55 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையம் மற்றும் பெரப்பன் சோலையில் ரூ. 39.95 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட கிராம செயலகம் என மொத்தம் ரூ. 56.5 லட்சம் மதிப்பில் முடிவுற்ற திட்டப் பணிகளை அமைச்சா் தொடங்கி வைத்தாா்.
இந்த நிகழ்வில், முன்னாள் எம்எல்ஏ கே.பி.ராமசுவாமி, அட்மா குழுத் தலைவா்கள் பெ.பாலசுப்பிரமணியன் (எருமப்பட்டி), எம்.பி.கெளதம் (புதுச்சத்திரம்), ஆா்.எம்.துரைசாமி (வெண்ணந்தூா்), கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் க.பா.அருளரசு, தனித்துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்பு திட்டம்) ச.பிரபாகரன் நாமக்கல் மாநகராட்சி ஆணையா் ரா.மகேஸ்வரி, பல்வேறு துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.