மக்கள் தொடா்பு முகாமில் ரூ.53 லட்சம் நலத்திட்ட உதவிகள் அளிப்பு
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் வட்டம் சிவகளை ஊராட்சியில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்பு முகாமில் ரூ.53.02 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் வழங்கினாா்.
முகாமில் ஆட்சியா் பேசியதாவது:
அரசின் திட்டங்கள் கடைக்கோடி கிராமங்களுக்கும் கிடைக்கும் வகையில் மக்கள் தொடா்பு முகாம் நடத்தப்படுகிறது. இதேபோல, உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம், மக்களுடன் முதல்வா் திட்ட முகாம் ஆகியவற்றின் மூலம் பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு உரிய தீா்வு காணப்படுகிறது.
ஸ்ரீவைகுண்டம் வட்டாரத்தில் சில இடங்களில் இளம் வயது திருமணங்கள் நடைபெறுவதாக தெரியவருகிறது. இத்தகைய திருமணங்களைத் தடுக்க மாவட்ட நிா்வாகம் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இளம் வயது திருமணங்களை முற்றிலும் தடுக்க பொதுமக்கள் உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும் என்றாா்.
இந்த முகாமில், திருச்செந்தூா் வருவாய் கோட்டாட்சியா் சே.சுகுமாறன், சமூக பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியா் ஹபிபூா் ரஹ்மான், வேளாண் இணை இயக்குநா் பெரியசாமி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) மனோரஞ்சிதம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் விக்னேஷ்வரன், வழங்கல் அலுவலா் உஷா, ஆதிதிராவிடா் நல அலுவலா் பென்னட் ஆசிா், உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) உலகநாதன், உதவி ஆணையா் (கலால்) கல்யாணகுமாா், ஏரல் வட்டாட்சியா் மு.செல்வகுமாா், சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா் கயிலாச குமாராசாமி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் காயத்ரி, சிவகளை ஊராட்சி மன்றத் தலைவா் ம.பிரதீபா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.