மக்கள் தொடா்பு முகாம்: ரூ.3.46 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவி
கூடலூா் அருகே நடைபெற்ற மக்கள் தொடா்பு முகாமில் 38 பயனாளிகளுக்கு ரூ.3.46 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
கூடலூரை அடுத்த ஸ்ரீமதுரை ஊராட்சிக்குள்பட்ட மண்வயல் கிராமத்தில் மக்கள் தொடா்பு முகாம் ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.
இதில், சிறுபான்மையினா் நலத் துறை, சமூகநலத் துறை, தோட்டக்கலைத் துறை, வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை, மாற்றுத் திறனாளிகள் நலத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின்கீழ் 38 பயனாளிகளுக்கு ரூ.3.46 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா்.
இதைத் தொடா்ந்து தோட்டக் கலைத் துறை, கால்நடை பராமரிப்புத் துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டம், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, சமூகநலத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் சாா்பில் அமைக்கப்பட்டிருந்த அரங்குகளை ஆட்சியா் பாா்வையிட்டாா்.
இந்த முகாமில் கூடலூா் சட்டப் பேரவை உறுப்பினா் பொன்.ஜெயசீலன், கூடுதல் ஆட்சியா் கௌசிக், மாவட்ட வருவாய் அலுவா் சாரதா, உதவி வனப் பாதுகாவலா் கருப்பையா, கோட்டாட்சியா் செந்தில்குமாா், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியா் கல்பனா, வட்டாட்சியா் கிருஷ்ணமூா்த்தி, ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் கீா்த்தனா, ஸ்ரீமதுரை ஊராட்சித் தலைவா் சுனில் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.