மங்கலத்தில் புதிய பத்திரப் பதிவு அலுவலகம் திறக்கக் கோரிக்கை
மங்கலத்தில் புதிய பத்திரப் பதிவு அலுவலம் திறக்க வேண்டும் என்று கோட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்புக் கூட்டத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
திருப்பூா் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் கோட்டாட்சியா் அலுவலகத்தில் கோட்டாட்சியா் மோகனசுந்தரம் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.
இதில், மங்கலம் கிராம நீரினைப் பயன்படுத்தும் பாசன விவசாயிகள் நலச் சங்கத்தின் தலைவா் சி.பொன்னுசாமி அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது: திருப்பூா் நெருப்பெரிச்சல் கிராமத்தில் இணை-1 பத்திரப் பதிவு அலுவலகம் உள்ளது. இங்கு மங்கலம், ஆண்டிபாளையம், இடுவாய் மற்றும் அதனைச் சுற்றியுள்ள விவசாயிகள், பொதுமக்கள் சுமாா் 20 கிலோ மீட்டா் தொலைவில் உள்ள நெருப்பெரிச்சல் சென்றுதான் பத்திரப்பதிவு செய்ய வேண்டியுள்ளது.
மேலும், பத்திரப்பதிவு அலுவலகத்துக்குச் செல்ல போதுமான அளவு வசதியும் இல்லாததால் விவசாயிகள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
எனவே, மங்கலத்துக்கு அருகில் உள்ள வேலம்பாளையம், வஞ்சிபாளையம், செம்மாண்டம்பாளையம், பூமலூா், ஆண்டிபாளையம், இடுவாய் உள்ளிட்ட கிராமங்களை இணைத்து மங்கலத்தில் புதிததாக பத்திரப் பதிவு அலுவலகம் திறக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.