செய்திகள் :

மட்டை அரிசி சாதம், அதலக்காய் குழம்பு... கொட்டும் மழையிலும் அசத்திய சமையல் சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சி!

post image

சமையல் திறமைகளை வெளிப்படுத்தும் மேடையாக, அவள் விகடன் தமிழகம் முழுவதும் முக்கிய நகரங்களில் சமையல் சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சியை நடத்த்தி வருகிறது. அந்நிகழ்ச்சி, மதுரையில் இன்று கோலாகலமாக தொடங்கியது.

போட்டியில் கலந்துகொள்ள காலையிலிருந்து மழையையும் பொருட்படுத்தாது நூற்றுக்கணக்கான போட்டியாளர்கள் உற்சாகமாக வருகை தந்திருந்தனர்.

முதல் கட்ட தேர்வுக்காக மட்டை அரிசி சாதம், அதலக்காய் குழம்பு, சுண்டைக்காய் குழம்பு, சேம்பு பொரியல், துவரம்பருப்பு துவையல்,தேங்காய்ப்பால் சாதம், மட்டன் கோலா குழம்பு, சக்கரை வள்ளி கிழங்கு இடியாப்பம், உளுந்து மூங்கிலரிசி சாதம், சீரகச்சம்பா தக்காளி, பிரண்டை தொக்கு, கேழ்வரகு கருப்பட்டி அல்வா, செட்டி நாட்டு முட்டை கிரேவி, முருங்கை கீரை சப்பாத்தி, கவுனி அரிசி பொங்கல், ராகி, கம்பு உள்ளிட்ட சிறுதானிய உணவுகள் என செய்து கொண்டு வந்து அசத்தியிருந்தனர்.

இவைர்கள் கொண்டு வந்த உணவுகளை சுவை பார்த்து அடுத்தகட்ட நேரடி சமையல் போட்டிக்கான போட்டியாளர்களை பிரபல செஃப் தீனா தேர்வு செய்தார்.

அதைத்தொடர்ந்து போட்டியாளர்களை உற்சாகப்படுத்த பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. பின்பு அடுத்தகட்ட போட்டிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. இதற்கிடையே எரிவாயு அடுப்பை பாதுகாப்பாக பயன்படுத்துவது குறித்து இண்டேன் நிறுவனத்தினர் செய்முறை விளக்கம் அளித்தனர்.