மணமும், பேறும் அருளும் சிவன்!
காஞ்சிபுரத்தைத் தலைமையிடமாகக் கொண்டு, கி.பி. மூன்றாம்} ஏழாம் நூற்றாண்டுகளில் ஆட்சி செய்த பல்லவர்கள், சோழர்கள் காலங்களில் கோயில்கள் பல எழுப்பப்பட்டன. அந்த வகையில் விஜயாலய சோழன் காலத்தைய கோயிலாக, மணிமங்கலம் ஸ்ரீ கைலாசநாதர் கோயில் விளங்குவதை இராஜசிம்ம பல்லவன் கால (கி.பி. 605 - 705) கல்வெட்டு உறுதிப்படுத்துகிறது.
மணிமங்கலம், பரியலம், சூரமாரம் போன்ற ஊர்களில் நடைபெற்ற போரில், இரண்டாம் புலிகேசி புறமுதுகு காட்டி ஓடியதையும் வெற்றி பெற்ற பல்லவனின் படைத்தளபதி பரஞ்சோதியே வாதாபியை வென்றவர் என்றும் பின்னாளில் திருசெங்கட்டாங்குடி தேவாரத் தலத்தில் சிறு தொண்டராகவும் போற்றப்பட்டார் என்றும் முதலாம் பரகேசரி வர்மனின் கூரத்து செப்பேடு (கி.பி. 670 )கூறுகிறது.
ஜெயங்கொண்ட சோழமண்டலத்து புலியூர் கோட்டமாக இந்த ஊர் "குலோத்துங்க சோழ வளநாட்டு குன்றத்தூர் நாட்டு மணிமங்கலம்' என்றும் "கிராம சிகாமணி சதுர்வேதி மங்கலம்' என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் இவ்வூர் பிராமணர்களுக்கு தானமாக வழங்கப்பட்டதை அறிய முடிகிறது.
பல்லவர் காலம் முதல் விஜயநகர மன்னர்கள் காலம் வரை இவ்வூர் வணிக நகரமாகவும் விளங்கியது. இங்கு கைலாசநாதர், தர்மேஸ்வரர் என இரண்டு சிவன் கோயில்களும், ராஜகோபால பெருமாள், வைகுண்ட பெருமாள் என இரு வைணவ கோயில்களும் அமைந்துள்ளன.
இங்குள்ள கைலாசநாதர் கோயில் சிதிலமடைந்து இருந்த நிலையில், இந்து சமய அறநிலையத் துறையின் வழிகாட்டுதலில், பெருங்களத்தூர் ஸ்ரீவிஸ்வநாத சுவாமிகள் தலைமையில் அருள்மிகு ஞானாம்பிகை சமேத கைலாசநாதர் திருப்பணிக் குழுவினர் திருப்பணிகளை மேற்கொண்டனர்.
கோயில் கிழக்கு முகமாக இருக்க, மேற்கு வாயில் பிரதானமாகவும், வடக்கு வாயில் துணை வாயிலாகவும் அமைந்துள்ளன. நடுநாயகமாக இறைவன் கைலாசநாதர் சந்நிதியும், விநாயகர், வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர், ஞானாம்பிகை, பைரவர், சண்டிகேஸ்வரர் சந்நிதிகளும் ஒருங்கே அமைந்துள்ளன. இறைவன் கிழக்கு முகமாக காட்சி தர, மன்னர் காலத் திருமேனி பழைமைத் தன்மையுடன் விளங்குகிறது. கருவறை கோட்டத் தெய்வங்களாக நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோற்பவர், பிரம்மா, துர்க்கை அனைத்தும் ஒருங்கே அமைந்துள்ளன.
இங்கு இறைவனை வழிபடுவோர் வேலைவாய்ப்பு, திருமணப் பேறு, குழந்தைப் பேறு போன்ற வரங்கள் கிடைக்கின்றன என்பது ஐதீகம்.
தாம்பரத்திலிருந்து மேற்கே சுமார் 10 கி. மீ. தொலைவில் இந்த ஊர் அமைந்துள்ளது.
பனையபுரம் அதியமான்