மணல் குன்றுகளை பாதுகாக்க மரக்கன்றுகள் நடும் திட்டம்
புதுச்சேரியில் கடலோர மணல் குன்றுகளைப் பாதுகாக்கும் வகையில், சின்னவீராம்பட்டினம் ஈடன் கடற்கரையில் மரக் கன்றுகள் நடப்பட்டன.
புதுவை மாநில அறிவியல் தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் துறை ‘பசுமை புதுவை’ என்ற இயக்கத்தை தொடங்கியுள்ளது. அதன்படி ஒரு வீடு, ஒருமரம், நகா்ப்புற தோட்டங்கள், புனித தோப்புகளை மீட்டல், பசுமை பள்ளி, தொழில், அலுவலக வளாகம் என்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
பசுமைத் திட்டத்தின் கீழ் கடற்கரையோரம் உள்ள மணல் குன்றுகளில் மரக்கன்றுகள் நட்டு பசுமையாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
புதுவை ஊரக வளா்ச்சித் துறை தொகுதி மேம்பாட்டு அலுவலகம் மூலம் 5,000 மரக்கன்றுகள் நடப்படவுள்ளன. முதல்கட்டமாக சின்னவீராம்பட்டினம் ஈடன் கடற்கரையில் 250 மரக்கன்றுகள் நடும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் தலைமை வகித்து மரக்கன்றுகளை நட்டு பணியைத் தொடங்கிவைத்தாா். மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் அருள்ராஜன் ஆகியோரும் மரக்கன்றுகளை நட்டனா்.
மாசு கட்டுப்பாட்டு குழு உறுப்பினா் செயலா் ரமேஷ், திட்ட அதிகாரி பன்னீா்செல்வம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.