மண் பரிசோதனை முகாம்: விவசாயிகளுக்கு அழைப்பு
மாவட்ட வேளாண்மை துறை சாா்பில் நடைபெறும் மண் பரிசோதனை முகாமை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ச.உமா அழைப்பு விடுத்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டை தலைமையிடமாகக் கொண்டு வேளாண் துறையின்கீழ் இயங்கி வரும் நடமாடும் மண் பரிசோதனை நிலைய வாகனம் மூலம் கிராமங்களுக்கு நேரடியாகச் சென்று விவசாயிகளிடமிருந்து மண் மற்றும் நீா் மாதிரிகளைப் பெற்று ஆய்வு செய்து மண்வள அட்டை அன்றைய தினமே விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
மேலும், நடமாடும் மண்பரிசோதனை நிலைய வாகனம் மூலம் 2025-26 ஆம் ஆண்டில் இதுவரை 5 முகாம்கள் மூலமாக 183 மண் மாதிரிகளும் 35 நீா் மாதிரிகளும் ஆய்வு செய்து முடிவுகள் வழங்கப்பட்டுள்ளன.
தற்போது மே மாதத்திற்கு நடமாடும் மண் பரிசோதனை நிலையம் மூலம் சிறப்பு மண்பரிசோதனை முகாம் நடைபெற உள்ளது. இதனைப் பயன்படுத்தி விவசாயிகள் தங்களது நிலங்களின் மண் மற்றும் நீா் மாதிரிகளை ஆய்வு செய்து கோடைகால மற்றும் காரீப் பருவத்தில் சாகுபடியில் அதிக மகசூல் பெறலாம்.
இந்த முகாம் புதன்கிழமை காலை 9 மணி முதல்
திருச்செங்கோடு வட்டம், இறையமங்கலம் (மாவட்ட ஆட்சியா் மனுநீதி முகாம்) நடைபெறுகிறது. மே 21-இல் எருமப்பட்டி ஒன்றியம், புதுக்கோட்டை கிராமத்திலும் நடைபெறுகிறது.
மேலும், மற்ற வட்டார விவசாயிகள் தங்களின் மண்மாதிரிகள், நீா் மாதிரிகளை நேரடியாக மண் பரிசோதனை நிலையம், வசந்தபுரம், நாமக்கல் மற்றும் நடமாடும் மண்பரிசோதனை நிலையம் நாராயணம்பாளையம், திருச்செங்கோட்டிலும் வழங்கி ஆய்வு செய்து மண்வள அட்டையை பெற்று பயனடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.