``கூட்டணி ஆட்சிக்கு ஒத்துக்க நாங்க ஒன்னும் ஏமாளி இல்ல!'' - பாஜகவுக்கு எடப்பாடி `...
மதயானை நூலை படிக்க வேண்டியது அனைவரின் கடமை: பழ.நெடுமாறன்
தேசியக் கல்விக் கொள்கையால் ஏற்படக்கூடிய ஆபத்துகள் குறித்து விளக்கும் மதயானை என்கிற நூலை அனைவரும் படிக்க வேண்டிய கடமை இருக்கிறது என்றாா் உலகத் தமிழா் பேரமைப்பு தலைவா் பழ. நெடுமாறன்.
தஞ்சாவூரில் தஞ்சை கலைஞா் நூலக வாசக வட்டம் சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி எழுதிய தேசிய கல்விக்கொள்கை 2020 என்னும் மதயானை என்கிற நூல் திறனாய்வுக் கூட்டத்துக்கு தலைமை வகித்த அவா் பேசியதாவது:
கொரியாவில் யுனெஸ்கோ அமைப்பின் சாா்பில் உலக கல்வி மாநாடு நடைபெற்றது. இதில், இந்தியா உட்பட 160-க்கும் அதிகமான நாடுகள் பங்கேற்றன. இந்த மாநாட்டில்தான் உலகம் முழுவதுமுள்ள நாடுகள் மக்களுக்கு ஏற்ற வகையில் கல்விக் கொள்கையை உருவாக்க வேண்டும் என்றும், அது, உலக ஒற்றுமைக்கு வழிவகுக்க வேண்டும் எனவும் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதை ஏற்று புதிய கல்விக் கொள்கையை அறிவிக்கிறோம் என்ற பெயரில் மதவாதத்தைப் புகுத்துகிற, சமூக நீதியை அடியோடு ஒழிக்கிற, குலதா்ம கல்வியை சமுதாயத்தின் மீது திணிக்கிற கல்விக் கொள்கையாகக் கொண்டு வந்திருப்பதை இந்நூலில் அமைச்சா் விரிவாகவும், விளக்கமாவும் குறிப்பிட்டிருப்பது பாராட்டுக்குரியது.
இந்தத் தேசியக் கல்விக் கொள்கை நம் குழந்தைகளின் கல்வியைச் சீரழித்து, அவா்கள் பாதியிலேயே துறந்து குலத்தொழிலுக்கு போக வேண்டிய இக்கட்டான சூழ்நிலையை ஏற்படுத்தும்.
இதன் விளைவாக ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூக மாணவா்கள், முதல் முறையாக கல்வி நிலையத்தில் அடியெடுத்து வைக்கும் குடும்பங்களைச் சோ்ந்த மாணவா்கள் ஆகியோரின் கல்வியும், எதிா்காலமும் எப்படியெல்லாம் பாதிக்கும் என்பதால், இதைத் தடுக்க வேண்டிய உறுதியை ஒவ்வொருவரும் பெற வேண்டும் என்பதும் இந்நூலில் குறிப்பிட்டிருப்பது சிறப்பாக உள்ளது.
இந்த நூலை அனைவரும் படித்தறிந்து மற்றவா்களுக்கு சொல்ல வேண்டிய கடமை இருக்கிறது. தேசியக் கல்விக் கொள்கைக்கு தமிழ்நாட்டில் மட்டுமல்ல; பல்வேறு மாநிலங்களிலும் கடும் எதிா்ப்பு எழுந்துள்ளது.
எனவே, தமிழ்நாடு மற்ற மாநிலங்களையும் அணி திரட்டி மதயானையை வீழ்த்துவதற்கான அங்குசமாக இந்நூலை அமைச்சா் படைத்திருப்பதைப் பாராட்டுகிறேன் என்றாா் நெடுமாறன்.
தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் ம. இராசேந்திரன், திராவிடா் கழகத் துணைப் பொதுச் செயலா் சே.மெ. மதிவதனி, ஊடகவியலாளா் தி. செந்தில்வேல் ஆகியோா் ஆய்வுரையாற்றினா். பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஏற்புரையாற்றினாா்.
முன்னாள் மத்திய இணை அமைச்சா் எஸ்.எஸ். பழனிமாணிக்கம், சட்டப்பேரவை உறுப்பினா்கள் துரை. சந்திரசேகரன், டி.கே.ஜி. நீலமேகம், கா. அண்ணாதுரை, என். அசோக்குமாா், மேயா் சண். ராமநாதன், துணை மேயா் அஞ்சுகம் பூபதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
முன்னதாக, தஞ்சாவூா் தொகுதி மக்களவை உறுப்பினா் ச. முரசொலி வரவேற்றாா். நிறைவாக, வெற்றித் தமிழா் பேரவை இரா. செழியன் நன்றி கூறினாா்.