மது போதையில் தகராறு; மகனை ஆத்திரத்தில் கொன்ற தந்தை... ஒரே குடும்பத்தில் 4 பேர் கைது!
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகிலுள்ள சிதம்பராபுரம்- குமாரகிரி புதூர் சாலை அருகிலுள்ள காட்டுப் பகுதியில் இளைஞர் ஒருவரின் உடல் எரிந்த நிலையில் கிடந்துள்ளது. அந்த வழியாகச் சென்றவர்கள், எட்டயபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் கூறியுள்ளனர்.
போலீஸார் உயிரிழந்த நிலையில் இளைஞரின் உடலை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் எரித்துக் கொலை செய்யப்பட்டவர் தூத்துக்குடி தாளமுத்துநகரைச் சேர்ந்த செல்வகுமார் என்பது தெரிய வந்தது. இக்கொலைச் சம்பவம் தொடர்பாக செல்வகுமாரின் தந்தை மகேஷ், சகோதரர்கள் அரவிந்த் மற்றும் 17 வயதான தம்பி, உறவினர் பாலகிருஷ்ணன் ஆகியோரை கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து எட்டயபுரம் காவல் நிலைய போலீஸாரிடம் பேசினோம், "கோவில்பட்டி அருகிலுள்ள கிழவிபட்டியைச் சேர்ந்தவர் மகேஷ். இவரது 3 மகன்களில் செல்வகுமார் மதுபோதைக்கு அடிமையாகி அக்கம்பக்கத்தினரிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனையடுத்து குடும்பத்தோடு கிழவிபட்டியில் இருந்து தூத்துக்குடி தாளமுத்துநகருக்கு இடம்பெயர்ந்து வந்துள்ளனர். இங்கும் செல்வகுமார் மதுபோதையில் அக்கம் பக்கத்தினரிடம் தகராறு செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில், செல்வகுமாரை கடந்த 2 நாள்களுக்கு முன்னர் மதுரையில் உள்ள போதை ஒழிப்பு மற்றும் மறுவாழ்வு மையத்தில் சேர்ப்பதற்காக காரில் செல்வகுமாரை அழைத்துச் சென்றுள்ளனர். காரை மகேஷின் உறவினர் பாலகிருஷ்ணன் ஓட்டிச் சென்றுள்ளார். கார், எட்டயபுரம் அருகிலுள்ள சிந்தலக்கரை அருகில் சென்ற போது செல்வகுமார் மறுவாழ்வு மையத்திற்கு வர மறுத்து தந்தை மற்றும் சகோதரர்களிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த மகேஷ் மகன் என்றும் பார்க்காமல் செல்வகுமாரின் கழுத்தை நெரித்துள்ளார். இதில், செல்வகுமார் உயிரிழந்துள்ளார். செல்வகுமாரின் உடலோடு கோவில்பட்டி நோக்கி சென்ற அவர்கள் காட்டுப்பகுதியில் செல்வகுமாரின் உடலை பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டு ஒன்றும் தெரியாதது போல் வீட்டிற்கு வந்துள்ளனர்.
விசாரணையில் 4 பேரும் செல்வகுமாரை கொலை செய்ததை ஒப்புக் கொண்டனர். இதனையடுத்து அந்த 4 பேரையும் கைது செய்துள்ளோம். எரிந்த நிலையில் செல்வகுமாரின் உடல் கிடந்ததால் முதலில் அப்பகுதியில் உள்ள பெட்ரோல் பல்க்கில் பிளாஸ்டிக் கேனில் யாரவது பெட்ரோல் வாங்கிச் சென்றனரா என பல்க் ஊழியர்களிடம் விசாரித்தோம். காரில் வந்து சிலர் பிளாஸ்டிக் கேனில் பெட்ரோல் வாங்கிச் சென்றது தெரிய வந்தது. இதனையடுத்து அங்குள்ள சி.சி.டி.வி கேமரா பதிவுக் காட்சிகளை ஆய்வு செய்தபோது காரின் பதிவெண்ணைக் கொண்டு விசாரணை நடத்தியதில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்” என்றனர்.