'இந்த பொண்ணுங்க அவ்வளவு உழைச்சிருக்காங்க!' - உருகும் இந்திய அணியின் பயிற்சியாளர்...
மதுப்பழக்கம்: வேலைக்குச் செல்லாமல் மனைவியிடம் தகராறு; கண்டித்த மாமியாரை வெட்டிக் கொலை செய்த இளைஞர்
நெல்லை அருகேயுள்ள சுத்தமல்லியைச் சேர்ந்தவர் செல்லப்பா. இவரது மனைவி வள்ளியம்மாள். இவர்களுக்கு துர்காதேவி என்ற மகளும், விக்னேஷ் என்ற மகனும் உள்ளனர்.
இதில் துர்காதேவி கீழச்செவலைச் சேர்ந்த ஆறுமுகநயினார் என்பவரை கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். விக்னேஷுக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணமாகி பெற்றோருடன் வசித்து வருகிறார்.
ஆறுமுகநயினாருக்கு மதுப்பழக்கம் இருந்துள்ளது. இதனால், சரியாக வேலைக்குச் செல்லாமல் மனைவியிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
மனைவியை அடித்து துன்புறுத்தி பெற்றோர் வீட்டுக்கு அனுப்பி வைப்பதும் பின்னர் அவர்கள் சமரசம் செய்து வைப்பதும் வழக்கமாக நடந்து வந்துள்ளது.

இதனால் ஆறுமுகநயினாரின் மாமியாரான வள்ளியம்மாள் அவரை அடிக்கடி கண்டித்து வந்துள்ளார். இந்த நிலையில், மீண்டும் கணவன், மனைவியிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து துர்காதேவி தனது பெற்றோர் வீட்டிற்கு வந்துள்ளார்.
இந்த நிலையில், நேற்று மாலை தனது மனைவியை பார்ப்பதற்காக துர்காதேவியின் வீட்டிற்கு ஆறுமுகநயினார் வந்துள்ளார்.
அப்போது வீட்டின் முற்றத்தில் படுத்திருந்த வள்ளியம்மாள், ஆறுமுகநயினாரை அவதூறாகப் பேசியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர், அரிவாளால் வள்ளியம்மாளை சரமாரியாக வெட்டியுள்ளார்.
இதில், அவருக்கு தலை, வயிறு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பலத்த வெட்டு விழுந்த நிலையில் உயிரிழந்தார். இதை தடுக்கவந்த துர்காதேவிக்கும் அரிவாள் வெட்டு விழுந்து, காயமடைந்தார்.
வள்ளியம்மாள் வெட்டப்பட்ட சம்பவம் குறித்து அவரது மகள் துர்காதேவி போனில் தந்தை செல்லப்பாவிற்கு தகவல் கூறியுள்ளார். இதையடுத்து அவசர அவசரமாக வீட்டிற்கு சென்றுள்ளார் செல்லப்பா. அங்கு போலீஸார் விசாரணை நடத்தி கொண்டிருந்தனர்.

அப்போது செல்லப்பாவிடம் போனில் பேசிய ஆறுமுகநயினார், “என்ன மாமா எப்படி இருக்கீங்க? வீட்டுக்குப் போனீங்களா ஏதும் விசேஷம் உண்டா?” என கேள்வி கேட்டு மாமியார் உயிருடன் உள்ளாரா இல்லையா என்பதை கேட்டு தெரிந்து கொள்ள முயன்றுள்ளார்.
பின்னர்தான் ஆறுமுகநயினார் தன் மனைவி வள்ளியம்மாளை கொலை செய்துவிட்டு தப்பியோடியது தெரிய வந்தது. வீட்டில் ஹாயாக கட்டிலில் படுத்திருந்த ஆறுமுகநயினாரை போலீஸார் கைது செய்தனர்.
















