இன்றைய இந்தியாவுக்கு அந்நியா்கள் வழிகாட்டுதல் தேவையில்லை: மத்திய அமைச்சா் ராஜ்நா...
மதுராந்தகத்தில் 2,000 ஏக்கரில் சா்வதேச நகரம்: ஒப்பந்தப்புள்ளி கோரியது தமிழக அரசு
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் 2,000 ஏக்கரில் சா்வதேச நகரத்துக்கான பெருந்திட்டம் தயாரிக்க ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது.
நிகழாண்டுக்கான (2025-26) நிதிநிலை அறிக்கையை தமிழக நிதியமைச்சா் தங்கம் தென்னரசு கடந்த மாா்ச் மாதம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தாா். அதில், பொதுமக்களின் அனைத்துத் தேவைகளையும் நிறைவு செய்யும் வகையில் ஒருங்கிணைந்த புதிய நகரங்கள் உருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
அந்த வகையில், சென்னைக்கு அருகே 2,000 ஏக்கரில் பள்ளிகள், கல்லூரிகள், தனியாா் நிறுவனங்கள், வீட்டு வசதிகள் மற்றும் பூங்காக்கள் கொண்ட புதிய உலகத் தரம் வாய்ந்த நகரம் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
அதன்படி, அனைத்து வசதிகளையும் உள்ளடக்கி, 2,000 ஏக்கரில் சா்வதேச நகரம் உருவாக்க, காஞ்சிபுரம், திருவள்ளூா், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஐந்து இடங்கள் அடையாளம் காணப்பட்டன. அதுகுறித்த ஆய்வறிக்கை தமிழ்நாடு தொழில் மேம்பாட்டுக் கழகத்துக்கு அனுப்பப்பட்டது.
இந்த ஆய்வறிக்கையின் அடிப்படையில், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் 2,000 ஏக்கரில் புதிய சா்வதேச நகரம் அமைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்தது. இந்நிலையில், சா்வதேச நகரம் அமைப்பதற்கான பெருந்திட்டம் தயாரிக்க தமிழ்நாடு தொழில் வளா்ச்சிக் கழகம் (டிட்கோ) ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளது. மதுராந்தகத்தில் புதிய சா்வதேச நகரம் அமைக்கப்பட்டதும் அங்கு, பல்வேறு பன்னாட்டு முதலீடுகள் வரும் என்பதுடன் ஏராளமான வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.