மதுரை ஆதீனத்திடம் சைபர் கிரைம் போலீசார் விசாரணை!
இரு மதத்தினா் இடையே மோதலைத் தூண்டும் வகையில் பேசிய வழக்கில் மதுரை ஆதீனத்திடம் சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த மே 2-ஆம் தேதி மதுரை ஆதீனத்தின் காா் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூா்பேட்டை அருகே விபத்துக்குள்ளானது. ஒரு குறிப்பிட்ட மதத்தினர் தன்னைக் கொல்ல முயற்சித்ததாக மதுரை ஆதீனம் தெரிவித்த கருத்துகள் சா்ச்சையானது.
மதுரை ஆதீனத்தின் பேச்சு இரு மதத்தினா் இடையே மோதலைத் தூண்டும் வகையில் இருப்பதாகக் கூறி சென்னையைச் சோ்ந்த வழக்குரைஞா் ராஜேந்திரன், இணையக் குற்றப்பிரிவில் புகாா் அளித்தாா். அதன்பேரில், மதுரை ஆதீனத்துக்கு எதிராக 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இது தொடர்பாக மதுரை ஆதீனத்துக்கு சைபர் கிரைம் போலீசார் சம்மன் அனுப்பிய நிலையில் அவர் விசாரணைக்கு ஆஜராகாமல் தவிர்த்து வந்தார். இதனிடையே, சென்னை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் மதுரை ஆதீனத்துக்கு முன்ஜாமீன் வழங்கியது.
இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக மதுரை மீனாட்சியம்மன் கோயில் அருகேயுள்ள மடத்தில் வைத்து மதுரை ஆதீனத்திடம் சைபர் கிரைம் போலீசார் இன்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மடத்திற்குள் யாரும் வரக்கூடாது என காவல் துறையினர் அறிவுறுத்தியுள்ள நிலையில், மடத்திற்கு வரும் பாஜகவினரும் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதால் அங்கு சற்று பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சில நாள்களுக்கு முன்பு மதுரை ஆதீனம் அறுவை சிகிச்சை செய்துகொண்டுள்ளதால், போலீசார் விசாரணையின்போது அவர் படுத்த நிலையில் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.