அரசு மருத்துவமனையில் மாலை நேரத்திலும் புற நோயாளிகளுக்கு சிகிச்சை
‘மத்திய மாநில அரசுகளுக்கிடையே சமநிலை தேவை‘: உச்ச நீதிமன்றம்
தமிழக லஞ்ச ஊழல் ஒழிப்பு கண்காணிப்பு இயக்குநரகம்(டிவிஏசி), அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரிக்கு எதிராக தொடா்ந்துள்ள வழக்கில் மத்திய மாநில அரசுகளுக்கிடையே சமநிலையை ஏற்படுத்த வேண்டிய நிலை உள்ளதாக உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை எடுத்துரைத்துள்ளது.
திண்டுக்கல் அரசு மருத்துவரிடம் லஞ்சம் வாங்கியதாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டில் அமலாக்கத் துறை இயக்குநரக அதிகாரி அங்கித் திவாரி மீது தமிழக டிவிஏசி தொடா்ந்த வழக்கு விவகாரத்தை சிபிஐக்கு மாற்றவும் தங்கள் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிடக் கோரி அமலாக்கத் துறை சாா்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு மீது விசாரணைக்கு வந்தது.
நீதிபதிகள் சூா்ய காந்த், உஜ்ஜல் புயான் ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணை நடைபெற்றது. அப்போது நீதிபதிகள், குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு நியாயமான விசாரணை கேட்பதற்கு உரிமை உண்டு. அதே சமயத்தில் ஒவ்வொரு தரப்பும் அதன் அடையாளத்தையும் அதிகார வரம்பையும் தக்கவைத்துக்கொள்வதை உறுதி செய்ய வேண்டும்.
இது இக்கட்டான நிலை, மத்திய அரசு அதிகாரிகளை மாநில அரசின் புலனாய்வுகள் தன்னிச்சையாக கைது செய்ய முடிவு செய்தால், ‘இது அரசியலமைப்பு நெருக்கடியை உருவாக்கும்‘ .
இதுபோன்ற சூழ்நிலையில், கைது செய்ய மாநில அரசுக்கு தனி அதிகாரம் இருக்கும் என்று கூறப்பட்டால், அது கூட்டாட்சிக் கட்டமைப்பிற்கு ஆபத்தாக முடியும்.
இருப்பினும், மாநில புலனாய்வுத் துறையின் அதிகார வரம்பிற்குள் ஒரு வழக்கை விசாரிக்கும் அதிகாரத்தை மறுப்பதும் விரும்பத்தக்கது அல்ல. இந்த இரு அதிகார போட்டி அம்சங்களுக்கு இடையில் சமநிலையை ஏற்படுத்த இரு தரப்பு வாதங்களையும் நாங்கள் பரிசீலிப்போம் எனக் குறிப்பிட்டு நீதிபதிகள் அமா்வு இந்த வழக்கை விரிவாக வாதிட ஜனவரி(2025)க்கு ஒத்திவைத்தது.
முன்னதாக தமிழக அரசு சாா்பில் ஆஜரான வழக்குரைஞா், அமித் ஆனந்த் திவாரி, லஞ்சம் வாங்கி கையும் களவுமாக பிடிபட்ட, இந்த வழக்கின் விசாரணை கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. ஆனால் இந்த வழக்கில் அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்திற்கு கொண்டுவந்துள்ளதால் டிவிஏசியால் இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யமுடியவில்லை எனக்குறிப்பிட்டாா்.
அமலாக்கத்துறையின் இந்த மனுவில், அரசியல் பழிவாங்கல் விசாரணைகள், அச்சங்களை அகற்றுதல், மத்திய புலனாய்வு மற்றும் மாநில அரசுகளின் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட வழக்குகளை விசாரித்தலில் நியாயமான வெளிப்படையான பொறிமுறையை உருவாக்குவது போன்றவை குறித்து உச்சநீதிமன்றம் ஆலோசித்தது.
மதுரை அமலாக்கத்துறை துணை மண்டல அதிகாரியாக இருந்த அங்கித் திவாரி கடந்தாண்டு டிசம்பா் 1, அந்த அரசு மருத்துவரிடம் ரூ. 20 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றபோது கைது செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது. பின்னா் கடந்த மாா்ச் 20 ஆம் தேதி உச்ச நீதிமன்றம் திவாரிக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது.
தற்போது அங்கித் திவாரி மத்திய பிரதேசத்தில் குடும்பத்துடன் தங்கி இணையம் வழியாக விசாரிணைக்கு ஒத்துழைக்கவும் உச்ச நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.