கல்வி நிறுவனங்களின் பெயர்களில் சாதியப் பாகுபாடு: வழக்கில் ஒருவார கால அவகாசம் அளி...
மனிதர்களுக்கு எச்சரிக்கை விடுக்கிறதா இயற்கை? கடலின் விநோத நிகழ்வுகளால் குழப்பம்!
சமீபகாலமாக பெருங்கடல் பகுதிகளில் நிகழும் அசாதாரணமான நிகழ்வுகளால் மனிதர்களை கடல் எச்சரிக்கிறதா என்ற சந்தேகம் பலரிடையே தோன்றியுள்ளது.
சூரிய வெளிச்சத்தையே அறியாத வகையில் பெருங்கடல்களின் ஆழ்பகுதியில் வாழும் மீன்களின் சமீபகால நடவடிக்கைகள், மனிதர்களுக்கு கடல் தெரிவிக்கும் சமிக்ஞை வடிவிலான எச்சரிக்கையாகக்கூட இருக்கலாம் என்று சமூக ஊடகங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஜப்பானிய புராணக் கதைகளில் கடல் கடவுளின் தூதன் என்று வர்ணிக்கப்படும் ‘டூம்ஸ் டே’ மீன், மெக்சிகோவின் பசிபிக் கடற்கரையில் சமீபத்தில் கரை ஒதுங்கியது. இவ்வகை மீன்கள் ஆழ்கடலில் மட்டுமே காணப்படும். நிகழவிருக்கும் பேரழிவுகளின் அறிகுறியாக இவை இவ்வாறு இறந்த நிலையில் கரை ஒதுங்கும் எனக் கருதப்படுகின்றது. மெக்சிகோவில் டூம்ஸ் டே மீன் கரை ஒதுங்கியது, பூகம்பங்கள் அல்லது சுனாமிகளை சமிக்ஞை செய்வதாக சிலர் கூறுகின்றனர்.
கடந்த 2011 ஆம் ஆண்டு ஜப்பானில் மிகப்பெரிய அளவிலான பேரழிவை ஏற்படுத்திய சுனாமிக்கு முன்னர் சுமார் 20 ’டூம்ஸ் டே’ மீன்கள் இறந்த நிலையில் அந்நாட்டு கடல் பகுதிகளில் கரை ஒதுங்கியதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிக்க:கும்பமேளாவில் இரட்டிப்பு லாபம் கண்ட நிறுவனங்கள்!
இதனைப்போலவே, ஆழ்கடலில் வசிக்கும் ஒளிரும் தன்மையுடைய ஆங்க்லர் மீனும் சமீபத்தில் ஸ்பெயின் கடற்கரையில் கரை ஒதுங்கியது அப்பகுதி மக்களிடையே அச்சம் கலந்த சந்தேகத்தை உண்டாக்கியுள்ளது. இருப்பினும், கடலினுள் அசாதாரணமான வெப்பநிலை அல்லது நீரோட்டம் காரணமாக ஆங்க்லர் மீன் கரை ஒதுங்கியிருக்கலாம் என்று கடல் ஆராய்ச்சி நிபுணர்கள் கூறுகின்றனர்.
மற்றொரு சம்பவமாக, சுமார் 150 திமிங்கலங்கள் டாஸ்மேனியாவின் கடற்கரையில் கரை ஒதுங்கியதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவற்றை கடலுக்கே திசைதிருப்பும் வகையில் மீட்பு முயற்சிகள் மேற்கொண்டபோதிலும், பெரும்பாலான திமிங்கலங்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தில் ஆழ்த்தியது.
இவ்வாறான வினோத நிகழ்வுகள், கடலின் சமநிலையில் ஏற்படும் மாற்றத்தைப் பற்றிய ஒரு பெரிய அறிகுறியாக இருக்கலாம். இத்தகைய அசாதாரண நிகழ்வுகளுக்கு பருவநிலை மாற்றமே காரணமா அல்லது மனிதர்களுக்கு இயற்கை தெரிவிக்கும் சமிக்ஞையா என்ற ஆய்வில் பல நெட்டிசன்கள் ஈடுபட்டுள்ளனர். நிலநடுக்கங்களால் ஏற்படும் அழுத்த மாற்றங்களால்தான் இந்த ஆழ்கடல் உயிரினங்களை மேற்பரப்பில் நீந்தும்படி கட்டாயப்படுத்தக் கூடும் என்று சில விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.