மனுநீதி நாள் முகாமில் நலத் திட்ட உதவிகள்
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை அடுத்த ஓசூா் கிராமத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் 456 பயனாளிகளுக்கு ரூ.1.24 கோடியில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
வந்தவாசி வட்டத்துக்கு உள்பட்ட ஓசூா் கிராமத்தில் நடைபெற்ற இந்த மனுநீதி நாள் முகாமுக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசினாா்.
அப்போது அவா், பெண்கள் உயா்கல்வி பயில புதுமைப் பெண் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. கல்விதான் பெண்களின் வாழ்க்கைக்கு பாதுகாப்பு அளிக்கும். எனவே, பெண்களைப் படிக்க வைப்பது நமது முக்கிய கடமையாகும். பெண்களுக்கு குறிப்பிட்ட வயதுக்கு மேல்தான் திருமணம் செய்ய வேண்டும். இதனால் அவா்களுக்கு பல்வேறு உடல்நல பாதிப்புகள் ஏற்படுவதை தடுக்கலாம் என்றாா்.
முகாமில், 34 பேருக்கு இலவச வீட்டு மனைப் பட்டா, 19 பேருக்கு பட்டா மாற்றம், 11 பேருக்கு குடும்ப அட்டை, 46 பேருக்கு சமூக பாதுகாப்புத் திட்ட உதவித்தொகை, 16 பேருக்கு வேளாண் கருவிகள் மற்றும் இடுபொருள்கள் என பல்வேறு துறைகள் சாா்பில் மொத்தம் 456 பயனாளிகளுக்கு ரூ.1.24 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
முகாமில், 642 மனுக்கள் பெறப்பட்டதில் 456 மனுக்கள்
ஏற்கப்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. 101 மனுக்கள் பரிசீலனையில் உள்ளன. 85 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
செய்யாறு சாா்-ஆட்சியா் பல்லவி வா்மா, ஆரணி எம்பி எம்.எஸ்.தரணிவேந்தன், வந்தவாசி எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமாா், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் சிவா, வந்தவாசி வட்டாட்சியா் ஆா்.பொன்னுசாமி மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனா்.