தில்லியில் சூதாட்டச் சட்டத்தின் கீழ் ஆம் ஆத்மி கவுன்சிலா் உள்பட 7 போ் கைது!
மயிலாடுதுறை டிஎஸ்பி பணியிடை நீக்கம்: தமிழக அரசு உத்தரவு
பணியில் ஒழுங்கீனமாக இருந்ததாக மயிலாடுதுறை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு துணைக் காவல் கண்காணிப்பாளா் (டிஎஸ்பி) சுந்தரேசனை பணியிடை நீக்கம் செய்து தமிழக அரசு சனிக்கிழமை உத்தரவிட்டது.
மயிலாடுதுறை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு துணைக் காவல் கண்காணிப்பாளராக (டிஎஸ்பி) பணியாற்றியவா் சுந்தரேசன். இவா் தனது அலுவலகத்துக்கு நடந்து செல்வதாக அண்மையில் ஊடகங்களில் விடியோ காட்சிகள் வெளியாகின. அவருக்கு பழுதடைந்த வாகனம் ஒதுக்கப்பட்டதால், அந்த வாகனம் தேவையில்லை என திரும்ப ஒப்படைத்துவிட்டு வீட்டில் இருந்து அலுவலகத்துக்கு சுந்தரேசன் நடந்து செல்வதாகக் கூறப்பட்டது.
இதற்கு மயிலாடுதுறை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கோ.ஸ்டாலின் மறுப்பு தெரிவித்தாா். அதேநேரம், டிஜிபி அலுவலகத்தில் பணியாற்றும் சில காவல் உயரதிகாரிகள் மீதும் சுந்தரரேசன் குற்றச்சாட்டுகளைத் தெரிவித்தாா்.
பணியிடை நீக்கம்: இந்த விவகாரம் குறித்து தஞ்சாவூா் சரக டிஐஜி ஜியாவுல் ஹக், விசாரணை நடத்தி டிஜிபி சங்கா் ஜிவாலிடம் அறிக்கை அளித்தாா். அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க , தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் தீரஜ்குமாரிடம் டிஜிபி பரிந்துரைத்தாா். இதையடுத்து, டிஎஸ்பி சுந்தரேசனை பணியிடை நீக்கம் செய்து தீரஜ்குமாா் சனிக்கிழமை உத்தரவிட்டாா்.
குற்றச்சாட்டுகள்: டிஎஸ்பி சுந்தரேசன், தமிழக காவல் துறையின் மூத்த அதிகாரிகள் மீது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறி ஊடகங்களில் பேட்டி அளித்து, அரசு ஊழியருக்கான விதிமுறைகளை முற்றிலும் மீறி பணி ஒழுங்கீன செயலில் ஈடுபட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக அந்த உத்தரவிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், தன்னுடன் பணிபுரிந்த பெண் காவல் ஆய்வாளா் சி.அன்னை அபிராமிக்கு மிரட்டல் விடுத்தது, மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு உதவி ஆய்வாளா் முருகவேல் தனது அறைக்கு ஏசி, பிரிண்டா் பொருத்தவில்லை என அவமானப்படுத்தும் வகையில் பேசியது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுந்தரேசன், பணியிடை நீக்க நடவடிக்கையில் இருப்பதால் மயிலாடுதுறை தலைமையிடத்தை விட்டு வெளியே அனுமதியின்றி செல்லக் கூடாது, அரசு வழங்கும் படி, சலுகைகள் உள்ளிட்டவை பணியிடை நீக்க காலத்தில் ரத்து செய்யப்படும் எனவும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.