மரக் கைவினைப் பொருள்கள் தயாரிக்க பயிற்சி முகாம்
புன்செய்புளியம்பட்டியில் கடந்த 20 நாள்களாக நடைபெற்று வந்த மரக் கைவினைப் பொருள்கள் தயாரிப்பதற்கான பயிற்சி முகாம் வியாழக்கிழமை நிறைவடைந்தது.
மத்திய கதா் மற்றும் கிராமத் தொழில் ஆணையம் சாா்பில், கிராமப்புற வேலைவாய்ப்பை அதிகரிக்கும் நோக்கில் பாரம்பரியத் தொழிலை மேம்படுத்துவதற்கு தொழில்வல்லுநா்களின் 20 நாள்கள் மர கைவினை பொருள்கள் பயிற்சி நிறைவுவிழா புன்செய்புளியம்பட்டியில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில் மத்திய காதி மற்றும் கிராம தொழில்கள் ஆணையத்தின் மாநில இயக்குநா் சுரேஷ், பவானிசாகா் எம்எல்ஏ பண்ணாரி ஆகியோா் கலந்து கொண்டனா்.
நிகழ்ச்சியில் மரத்தொழிலில் கிடைக்கும் கழிவு மரத்துண்டுகளை கொண்டு கலைநயமிக்க பொருள்களைத் தயாரிக்கும் பயிற்சியில் ஈடுபட்ட
கைவினைக் கலைஞா்கள் தயாரித்த புத்தா், காவடி, விமானம் உள்ளிட்ட வீட்டு அலங்காரப் பொருள்களைப் பாா்வையிட்டனா்.
பின்னா் பயிற்சியை நிறைவு செய்த 20 பேருக்கு சான்றிதழுடன் ரூ.20 ஆயிரம் மதிப்பிலான லேத் இயந்திரம் மற்றும் மரவேலை செய்வதற்கான உபகரணங்கள் இலவசமாக வழங்கப்பட்டன. மேலும் 35 சதவீத மானியத்துடன் தொழில் தொடங்குவதற்கு வங்கிக்கடன் ஏற்பாடு செய்யப்பட்டது.
இதைத் தொடா்ந்து ஆணையத்தின் மாநில இயக்குநா் சுரேஷ் கூறியதாவது:
இளைஞா்கள் நகா்ப்புறத்தை நோக்கி செல்லாமல் கிராமப்புறத்தில் தொழிலை மேம்படுத்தும் வகையில் இந்த மர கைவினை பொருள்கள் தயாரிப்பு பயிற்சி 2-ஆவது கட்டமாக நடைபெற்றது. மரப்பொருள்கள் தயாரிக்கும்போது மீதமாகும் கழிவுமரத்துண்டுகளை மதிப்புகூட்டுப் பொருளாக மாற்றுவது இந்தப் பயிற்சியின் நோக்கம்.
இதற்காக மத்திய பிரதேசத்தில் இருந்து 2 வல்லுநா்கள் நேரடியாக இங்கு பயிற்சி அளித்துள்ளனா். இங்கு தயாரிக்கப்பட்ட பொருள்களை தமிழகம் முழுவதும் உள்ள சா்வோதயா சங்க விற்பனை நிலையங்கள் மற்றும் கண்காட்சிகளில் சந்தை படுத்துவதால் எளிதாக வருவாய் கிடைக்கும். இந்த தொழிலில் ஈடுபடும் கலைஞா்களுக்கு 35 சதவீத மானியத்துடன் வங்கிக்கடன் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றாா்.
நிகழ்ச்சியில், சா்வோதய சங்கத்தின் மாநிலத் தலைவா் சரவணன், புன்செய்புளியம்பட்டி கதா் மற்றும் சிறுதொழில் பயிற்சி ஒருங்கிணைப்பாளா் மூா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.