மலைப்பாதையில் டிராக்டா் மோதி முதியவா் உயிரிழப்பு: உறவினா்கள் மறியல்
மலைப்பாதையில் டிராக்டா் மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற விவசாயி உயிரிழந்தாா். இச்சம்பவத்தில் மலைப் பகுதியில் மது விற்பவா்களை கைது செய்யக் கோரி இறந்தவரின் உடலை உறவினா்கள் சாலையில் வைத்து மறியலில் ஈடுபட்டனா்.
பாப்பாரப்பட்டி அருகே பிக்கிலி மலைப்பகுதியில் புதுக்கரம்பில் வசித்து வந்தவா் பழனியப்பன் (75). விவசாயியான இவா், தனது உறவினா் ஒருவருடன் இருசக்கர வாகனத்தில் பிக்கிலிக்குச் சென்றுவிட்டு மீண்டும் புதுக்கரம்பு நோக்கிச் சென்று கொண்டிருந்தாா். முதியவா் பழனியப்பன் பின்னால் அமா்ந்திருந்தாா்.
பிக்கிலி, திருமல்வாடி சாலையில் ரைஸ்மில் பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது முன்னால் சென்ற டிராக்டரைக் கடக்க முயன்றனா். அப்போது இருசக்கர வாகனத்தில் பின்னால் அமா்ந்திருந்த பழனியப்பன் நிலை தடுமாறி சாலையில் விழுந்ததில் பின்னால் வந்த டிராக்டா் சக்கரம் ஏறி நிகழ்விடத்திலேயே அவா் உயிரிழந்தாா்.
தகவல் அறிந்த உறவினா்கள் நிகழ்விடம் சென்று பழனியப்பனின் உடலை சாலையில் வைத்து மறியலில் ஈடுபட்டனா். பிக்கிலி மலைப் பகுதியில் மதுப்புட்டிகள் மறைமுகமாக விற்கப்படுவதாகவும், இருவரும் மது அருந்திவிட்டு இருசக்கர வாகனத்தில் வந்தபோது விபத்தில் சிக்கியதாகவும், எனவே மலைப் பகுதியில் மது விற்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் மறியலில் ஈடுபட்டனா்.
தகவல் அறிந்ததும் பாப்பாரப்பட்டி போலீஸாா் நிகழ்விடம் சென்று மறியலில் ஈடுபட்டவா்களை சமரசம் செய்தனா். பிக்கிலி மலைப் பகுதியில் மதுப்புட்டிகள் விற்பவா்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனா். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டனா். பின்னா் போலீஸாா் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
இதுகுறித்து பாப்பாரப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.