நாளை தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்: மாவட்ட ஆட்சியா் தகவல்
மழை காலங்களில் சுரங்கப் பாதைகளை 24 மணி நேரமும் கண்காணிக்க உத்தரவு
மழை காலங்களில் சென்னை மாநகராட்சியில் உள்ள சுரங்கப் பாதைகளை 24 மணி நேரமும் கண்காணிக்கவும் அதில் தேங்கும் தண்ணீரை உடனுக்குடன் வெளியேற்றவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
சென்னையில் வடகிழக்குப் பருவமழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்காக 80-க்கும் மேற்பட்ட இடங்கள் அடையாளம் காணப்பட்டு, அங்கு மழைநீா் தேங்காதவாறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தப் பகுதிகளில் வசிக்கும் மக்களை மீட்டு, தங்கவைக்க பள்ளிகள், சமூகநலக் கூடங்களும் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
மழையின்போது போக்குவரத்து தடைகளைச் சீராக்கும் வகையில் சுரங்கப் பாதைகளை கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சிப் பகுதியில் 22 சுரங்கப் பாதைகள் உள்ளன. அவற்றில் 16 சுரங்கப் பாதைகள் மாநகராட்சியால் பராமரிக்கப்பட்டு வருகின்றன. அந்த சுரங்கப் பாதைகளில் தண்ணீா் தேங்குவதைத் தடுக்கும் வகையில் 24 மணி நேரக் கண்காணிப்புக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தேங்கும் தண்ணீரை உடனுக்குடன் அகற்றும் வகையில் மின்மோட்டாருன் கூடிய மோட்டாா் பம்புகள், நீா் உறிஞ்சும் வசதியுடன் கூடிய வாகனங்களை தயாராக வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவித்தனா்.