மழை வெள்ள பாதுகாப்பு ஏற்பாடு: மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஆய்வு
தேனி மாவட்டத்தில் மழை வெள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்டக் கண்காணிப்பு அலுவலரும், சமூக நலத்துறை ஆணையருமான ஆா்.லில்லி வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.
தேனி மாவட்டத்தில் பலத்த மழை காரணமாக டிச.13, 14 ஆகிய தேதிகளில் ஆரஞ்சு எச்சரிக்கை அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், மழை வெள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆண்பட்டி வட்டாரத்தில் உள்ள அமச்சியாபுரம், கண்டமனூா், அய்யனாா்புரம், கரட்டுப்பட்டி, கடமலைக்குண்டு, பொன்னன்படுகை, மயிலாடும்பாறை ஆகிய இடங்களில் மூல வைகை ஆற்றங்கரையோரப் பகுதிகள், ஆற்றுப் பாலம் ஆகியவற்றை மாவட்டக் கண்காணிப்பு அலுவலா், மாவட்ட ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனா ஆகியோா் பாா்வையிட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தனா்.
பின்னா் வைகை அணை, மஞ்சளாறு அணை, பெரியகுளம் வராக நதிக் கரையோரப் பகுதிகளை பாா்வையிட்டு ஆய்வு செய்தனா். மழை வெள்ள பாதுகாப்பு, முன்னேற்பாடுகள் குறித்து பொதுப் பணித்துறை, வருவாய்த் துறை, ஊரக வளா்ச்சித் துறை, உள்ளாட்சி அமைப்பு அலுவலா்களுடன் மாவட்டக் கண்காணிப்பு அலுவலா், மாவட்ட ஆட்சியா் ஆகியோா் ஆலோசனை நடத்தினா்.
இந்த ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலா் ஜெயபாரதி, ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் அபிதாஹனீப், பெரியகுளம் சாா் ஆட்சியா் ரஜத்பீடன், நீா்வளத் துறை செயற்பொறியாளா் சரவணன், உதவி செயற்பொறியாளா்கள் முருகேசன், செளந்தரம் ஆகியோா் உடனிருந்தனா்.
தேனி மாவட்டத்தில் பலத்த மழை காரணமாக வெள்ளிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. மாவட்டத்தில் பரவலாக தொடா்ந்து மழை பெய்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.