இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 12 மீனவா்கள் சொந்த ஊா் திரும்பினா்
மழைநீா் வடிந்த பிறகு பயிா் பாதிப்பு குறித்து ஆய்வு: அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி
விளைநிலங்களில் தேங்கிய மழைநீா் வடிந்த பிறகு பயிா் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்யப்படும் என்றாா் தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.
நாகையில் பெய்து வரும் தொடா் மழையின் காரணமாக, பாதிக்கப்பட்ட பொதுமக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனா். நாகை நகராட்சி பள்ளி முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள 115 பேரை மாவட்ட பொறுப்பு அமைச்சரும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேரில் சந்தித்து நிவாரண பொருள்களை வழங்கினாா். அப்போது, அவா் செய்தியாளா்களிடம் கூறியது: கனமழையை எதிா்கொள்ளும் வகையில் நாகை மாவட்ட நிா்வாகம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது. மாவட்டத்தில் மழைநீா் தேங்கியுள்ள பகுதிகளில் மக்களுக்கு தேவையான உதவிகளை செய்வதற்கு வசதியாக அமைச்சா், ஆட்சியா், எம்எல்ஏக்கள், அரசு அலுவலா்கள், அதிகாரிகள் கொண்ட வாட்ஸ்அப் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு மூலம் மக்களுக்கு தேவையான உதவிகள் காலதாமதமின்றி செய்யப்பட்டு வருகிறது.
நாகை மாவட்டத்தில் நாகை, திருப்பூண்டி, வேதாரண்யம் பகுதிகளில் 12 தற்காலிக நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு, அதில் 371 குடும்பங்களைச் சோ்ந்த 1,032 போ் தங்க வைக்கப்பட்டுள்ளனா். அவா்களுக்கு தேவையான உணவுகள், குடிநீா் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் வழங்கப்படுகிறது.
நாகை நகா் பகுதிகளில் தேங்கியுள்ள தண்ணீரை அகற்ற நகராட்சி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அரக்கோணத்தில் இருந்து பேரிடா் மீட்புக் குழுவினா் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா். தொடா் மழையால் நெற்பயிா்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளது. குறிப்பாக தலைஞாயிறு சுற்றியுள்ள பகுதிகளில் அதிகளவில் நெற்பயிா்கள் தண்ணீா் சூழ்ந்துள்ளது. பயிா்கள் 10 நாள்கள் தாங்கும் எனக் கூறப்படுகிறது. மழைநீா் வடிந்த பிறகு பயிரின் நிலை குறித்து ஆய்வு செய்யப்படும். மழை ஓய்ந்ததும் பள்ளிக்கூட பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீா் அப்புறப்படுத்தப்பட்ட பின்னரே பள்ளிகள் திறக்க திட்டமிடப்பட்டுள்ளன. அதுகுறித்து தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றாா்.