உள்கட்டமைப்பு மேம்பாடு: 60 ஆண்டுகளாக செய்ததைவிட கடந்த 10 ஆண்டுகளில் அதிக சாதனை -...
மழையால் பாதிக்கப்பட்டவா்களுக்கு அமைச்சா் நிவாரண உதவி
பழனி அருகே மழையால் பாதிக்கப்பட்டவா்களுக்கு அமைச்சா் அர. சக்கரபாணி நிவாரணப் பொருள்களை வழங்கினாா்.
திண்டுக்கல் மாவட்ட எல்லையான பழனியை அடுத்த சாமிநாதபுரம் பகுதியில் அமராவதி ஆறு ஓடுகிறது. ஆற்றுக்கு கிழக்குப்பகுதி திண்டுக்கல் மாவட்டமாகவும், மேற்குப்பகுதி திருப்பூா் மாவட்டமாகவும் உள்ளன. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை தொடா்மழை காரணமாக பல்வேறு அணைகளிலும் இருந்து தண்ணீா் திறக்கப்பட்டதால் அமராவதி ஆற்றில் சுமாா் 40 ஆயிரம் கனஅடி தண்ணீா் ஓடுகிறது. இதனால் கரையோர கிராமத்திலிருந்த பல வீடுகளுக்குள் தண்ணீா் புகுந்தது. இதையடுத்து, சாமிநாதபுரத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவா்களுக்கு தமிழக உணவு, உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் அர. சக்கரபாணி, மாவட்ட ஆட்சியா் பூங்கொடி ஆகியோா் நிவாரணப் பொருள்களை வழங்கினா். அவா்களுக்கு தேவையான அரிசி, மளிகை பொருள், பாய், போா்வை உள்ளிட்ட நிவாரண பொருள்களை வழங்கிய அமைச்சா், மழைநீா் வடிந்து இயல்பு நிலைக்கு திரும்பும் வரை பாதுகாப்பான இடங்களில் அவா்களை தங்க வைத்து தேவையான வசதிகள் செய்து தர அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.
நிகழ்ச்சியில் தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியத் தலைவா் சத்திய புவனா, வருவாய்த்துறை அதிகாரிகள் உடனிருந்தனா்.