மகாராஷ்டிரத்தில் பாஜக கூட்டணி அசுர வெற்றி! ஜார்க்கண்ட்டை தக்கவைத்தது இந்தியா கூட...
மாஞ்சோலை வழக்கு; ஒத்திவைக்கப்பட்ட விசாரணை; வாழ்வாதாரம் உறுதி செய்யப்படாமல் தவிக்கும் தொழிலாளர்கள்!
நெல்லை மாவட்டம், மாஞ்சோலை பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டங்களை , 1929-ஆம் ஆண்டே பாம்பே பர்மா டிரேடிங் கார்பரேஷன் என்ற நிறுவனம் 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்து இருந்தது. வரும் 2028 ஆம் ஆண்டு, குத்தகை முடியவுள்ள நிலையில், அதற்கு முன்பாகவே தொழிலாளர்களை வெளியேற்ற எடுக்கப்பட்ட முடிவுக்கு எதிராகவும், அவர்களின் நிலையான வாழ்வாதாரத்திற்கு வழிவகுக்க கோரியும் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
மாஞ்சோலையைச் சேர்ந்த அமுதா, ஜான் கென்னடி, ரோஸ்மேரி, புதிய தமிழகம் கட்சித் தலைவர் கே.கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் தாக்கல் செய்துள்ள பொதுநல வழக்கு, கடந்த அக்டோபர் 23-ம் தேதி விசாரணைக்கு வந்தது. மாஞ்சோலை தொழிலாளர்களுக்கு வீடு கட்டி கொடுக்க வேண்டும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்க வேண்டும், தமிழக அரசின் டான் டீ நிறுவனம் மாஞ்சோலை தேயிலை தோட்டங்களை எடுத்து நடத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்னிறுத்தி, பல ஆண்டுகளாக அங்கே பணிபுரிந்து வந்தவர்களை வெளியேற்றக் கூடாது எனவும் வாதிடப்பட்டது.
இதற்கு எதிராக வனத்துறை சார்பில் இந்த பகுதி புலிகள் காப்பகமாக உள்ளது எனவும், சூரல்மலா மலை பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டதையும் குறிப்பிட்டு தொழிலாளர்களின் பாதுகாப்பு முக்கியம் என கருத்து தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்வதற்கு, தமிழக அரசு தரப்பில் மீண்டும் கால அவகாசம் கோர பட்ட நிலையில், அனைத்து வாதங்களையும் கேட்காமல் , எந்த உத்தரவும் பிறப்பிக்க இயலாது என கருத்து தெரிவித்த நீதிபதிகள், மீண்டும் வழக்கு விசாரணையை ஒத்திவைத்துள்ளனர்.
இது குறித்து மாஞ்சோலையைச் சேர்ந்த செல்வகுமாரிடம் பேசியபோது, ”மலைக்கு மேலே இருந்து நிறைய பேர் கீழ வந்துட்டாங்க, ஆனா அவுங்க யாருக்குமே நிலையான வாழ்வாதாரம் இல்லாம இருக்காங்க, பிள்ளைங்க படிப்பு பாதிக்கப்படுது. அரசு சார்புல எல்லோருக்கும் வீடு கட்டி தரணும், இல்ல வீடு கட்டுவதற்கு பணம் வழங்கணும்ங்கறது எல்லாரோட கோரிக்கையா இருக்கு. இங்க வசிக்கக்கூடிய வயசானவர்கள், இங்க இருந்து வெளியேற்றப்பட்டால், வீடுகள் இல்லாமல் முதியோர் இல்லங்களுக்குச் செல்ல வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்படுவார்கள், குத்தகை காலம் முடியறதுக்குள்ள, அரசு, எங்கள் தொழிலாளர்களின் நிலையான வாழ்வாதாரத்தையும் இருப்பிடத்தையும் உறுதி செய்யணும்" என்றார்.