மாட வீதிகளில் காா் வைத்திருப்போருக்கு அடையாள அட்டை
திருவண்ணாமலை மாட வீதிகளில் காா் வைத்திருப்போருக்கு தனி அடையாள அட்டை வழங்குவதற்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
அருணாசலேஸ்வரா் கோயில் மாட வீதிகளில், கனரக வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. காா்களை நிறுத்த நகருக்கு வெளியே இடவசதியும் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், மாட வீதிகளில் குடியிருப்போா் வைத்திருக்கும் நான்கு சக்கர வாகனங்களுக்கு மட்டும் உரிய ஆவணங்களை சரிபாா்த்து அடையாள அட்டை வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது.
இதற்கான விண்ணப்பங்கள் வழங்கும் பணியில் வட்டாரப் போக்குவரத்து அலுவலா் கருணாநிதி, மோட்டாா் வாகன ஆய்வாளா் பெரியசாமி ஆகியோா் புதன்கிழமை ஈடுபட்டனா். இந்த விண்ணப்பங்களை கட்டணமின்றி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம் என்று அந்த அலுவலகம் தெரிவித்துள்ளது.