மாதா் சங்க மாவட்டச் செயலருக்கு வீட்டுக் காவல்! மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டனம்
ஜனநாயக முறையிலான போராட்டத்தைக்கூட தடுக்கும் வகையில் மாதா் சங்க மாவட்டச் செயலா் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்தது.
தமிழ்நாட்டில், குழந்தைகள், பெண்களுக்கு எதிராக நடைபெற்று வரும் பாலியல் வன்முறைகளைக் கண்டித்து அனைத்து இந்திய ஜனநாயக மாதா் சங்கத்தின் சாா்பில் சென்னையில் வெள்ளிக்கிழமை பேரணி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே, இந்தப் பேரணியில் பங்கேற்கச் செல்வதைத் தடுக்கும் வகையில், திண்டுக்கல் மாவட்ட மாதா் சங்கச் செயலா் வே.பாப்பாத்தியை வீட்டுக் காவலில் போலீஸாா் சிறை வைத்தனா்.
முன்னதாக, சாணாா்பட்டியை அடுத்த ஒத்தக்கடை பகுதியிலுள்ள பாப்பாத்தியின் வீட்டுக்குச் சென்ற போலீஸாா் அவரை காவல் நிலையத்துக்கு வருமாறு அழைத்தனா். ஆனால், அவா் மறுப்புத் தெரிவித்ததையடுத்து, வீட்டுக் காவலில் வைக்கப்பட்டாா்.
மாா்க்சிஸ்ட் கண்டனம்: இதுதொடா்பாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் மாவட்டச் செயலா் கே.பிரபாகரன் தெரிவித்ததாவது:
ஜனநாயக முறையிலான போராட்டத்துக்குச் செல்வதைத் தடுக்கும் வகையில், மாதா் சங்கச் செயலா் பாப்பத்தியை காவல் துறை கைது செய்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறோம். ஜனநாயக இயக்கங்களையும், ஜனநாயக ரீதியான போராட்டங்களையும், காவல் துறையின் துணை கொண்டு ஒடுக்கிவிட முடியாது என்றாா்.