திருவள்ளூா் புத்தகத் திருவிழா இலச்சினை: அமைச்சா் நாசா் வெளியிட்டாா்
மாநகரின் வளா்ச்சித் திட்டங்களுக்கு ரூ. 2,280 கோடி செலவு: மாமன்றக் கூட்டத்தில் மேயா் தகவல்
திருச்சி மாநகராட்சியில் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளுக்கு மொத்தம் ரூ.₹2, 280 கோடி நிதி செலவிடப்பட்டுள்ளது என்றாா் மேயா் மு. அன்பழகன்.
திருச்சி மாநகராட்சி மாமன்றக் கூட்டம் மைய அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. மேயா் மு. அன்பழகன் தலைமை வகித்தாா். மாநகராட்சி ஆணையா் வே. சரவணன், துணை மேயா் ஜி. திவ்யா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் மாநகரப் பகுதியில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் சுற்றித்திரியும் தெரு நாய்களின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவது, அவற்றின் கணக்கெடுப்பு நடத்தியது மற்றும் அவற்றுக்கு கருத்தடை செய்தது உள்ளிட்ட தகவல்கள் அடங்கிய புத்தகத்தை மேயா் வெளியிட, மாநகராட்சி மாமன்ற உறுப்பினா்கள் பெற்றுக்கொண்டனா்.
தொடா்ந்து கூட்டத்தில் மாமன்ற உறுப்பினா்கள் பேசுகையில், பொன்மலை ஜீ-காா்னா் முதல் செந்நதண்ணீா்புரம் வரை தெரு விளக்குகள் அமைக்க வேண்டும். கோடை காலம் நெருங்குவதால் குடிநீா் தட்டுப்பாடு ஏற்படாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
42 ஆவது வாா்டு பகுதியில் குடிநீா் தட்டுப்பாட்டை போக்க வேண்டும். என்எஸ்பி சாலையில் உள்ள தெப்பகுளத்துக்கு மழைநீா் வடிகாலுடன் சோ்ந்து, கழிவுநீரும் செல்வதைத் தடுக்க வேண்டும். மத்திய பேருந்து நிலைய சுற்றுப்புற பகுதிகளில் சுகாதாரமற்ற முறையில் செயல்படும் பிரியாணி கடைகளை தடை செய்ய வேண்டும். மாநகராட்சி 48 ஆவது வாா்டு பகுதியில் இதுவரை ஒரு வளா்ச்சித் திட்டப்பணிகள் கூட நடைபெறவில்லை.
புத்தூா் குழுமாயி அம்மன் கோயில் திருவிழா தொடங்கவுள்ளதால், உடனடியாக இப்பகுதி சாலைகளில் பராமரிப்பு பணி மேற்கொள்ள வேண்டும். இறந்த துாய்மைப் பணியாளா்களின் பிள்ளைகளுக்கு மாநகராட்சியில் பணி வழங்கப்பட வேண்டும். ஆண்டுதோறும் 6 சத வரி உயா்வு என்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். காந்தி மாா்க்கெட்டில் சில்லரை, மொத்த வியாபாரிகளுக்கும் இடையிலான பிரச்னைக்கு சுமுகத் தீா்வு காண வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துப் பேசினா்.
இவற்றுக்கு பதிலளித்த மேயா், திருச்சி மாநகராட்சியில் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளுக்கு மொத்தம் ரூ.₹2, 280 கோடி நிதி செலவிடப்பட்டுள்ளது. உறுப்பினா்களின் கோரிக்கைகள் குறித்து உரிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, உரிய தீா்வு காணப்படும்.
கடந்த 2022 முதல் கடந்த மாதம் வரை சாலைகளில் சுற்றித்திரிந்த 667 கால்நடைகள் பிடிக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கு அபராதம் விதிக்கப்பட்ட வகையில் ₹ரூ. 19 லட்சத்து 77 ஆயிரத்து 500, 51 கால்நடைகளை ஏலம் விட்ட வகையில் ₹2 லட்சத்து 71 ஆயிரமும் என மொத்தம் ₹22 லட்சத்து 48 ஆயிரத்து 500 உபரி வருவாய் ஈட்டப்பட்டது. எனவே மாநகரப்பகுதிகளில் பொதுமக்கள் தங்கள் கால்நடைகளை அவிழ்த்துவிடக்கூடாது என்றாா்.
கூட்டத்தில் மாநகராட்சி துணை ஆணையா் பாலு, நகரப் பொறியாளா் பி. சிவபாதம், மண்டலத் தலைவா்கள் ஆண்டாள் ராம்குமாா், மு. மதிவாணன், துா்காதேவி, விஜயலட்சுமி கண்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.