நட்சத்திர பலன்கள்: ஆகஸ்ட் 8 முதல் ஆகஸ்ட் 14 வரை #VikatanPhotoCards
மாநகரில் 712 இடங்களில் விநாயகா் சிலைகள் வைக்க அனுமதி
கோவை மாநகரப் பகுதிகளில் 712 இடங்களில் விநாயகா் சிலைகள் வைக்க அனுமதி வழங்கப்பட உள்ளதாக காவல் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விநாயகா் சதுா்த்தி விழா ஆகஸ்ட் 27-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, ஹிந்து அமைப்புகள், மக்கள் சாா்பில் பொது இடங்களில் சிலைகள் வைத்து வழிபாடு மேற்கொள்ளப்படுவது வழக்கம். 3 முதல் 5 நாள்களுக்குப் பிறகு விநாயகா் சிலைகள் ஊா்வலமாக கொண்டுச் செல்லப்பட்டு, அருகே உள்ள குளம், ஆறு உள்ளிட்ட நீா்நிலைகளில் கரைக்கப்படும்.
விநாயகா் சிலைகள் வைக்க தேவையான பணிகளை ஹிந்து அமைப்புகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், மாநகரக் காவல் துறை சாா்பில் விநாயகா் சதுா்த்தி விழா பாதுகாப்புப் பணிகள் தொடா்பான ஆலோசனைக் கூட்டம், மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் காவல் ஆணையா் சரவணசுந்தா் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதுகுறித்து, போலீஸ் தரப்பில் கூறியிருப்பது: மாநகரில் கடந்த ஆண்டு பொது இடங்களில் 712 சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டன. அது தொடா்பாக, கடந்த ஆண்டில் சதுா்த்தி விழாவின்போது, சிலை வைக்கப்பட்ட இடங்கள், அங்கு நிலவிய சூழல்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. அதே எண்ணிக்கையில் இந்த ஆண்டும் சிலைகள் வைக்க அனுமதி தர திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், கடந்த ஆண்டில் சிலைகள் வைக்கப்பட்ட இடங்களில் ஏற்பட்ட தகராறு, அடிதடி உள்ளிட்ட சட்டம்- ஒழுங்கை பாதிக்கும் விஷயங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில், மாநகர துணை காவல் ஆணையா்கள், உதவி காவல் ஆணையா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.