மானாமதுரை கண்மாயிலிருந்து தண்ணீா் வெளியேற்றம்
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை பாசனக் கண்மாயிலிருந்து வியாழக்கிழமை மடை வழியாக தண்ணீா் வெளியேற்றப்பட்டது.
மானாமதுரை கண்மாய்க்கு பல ஆண்டுகளுக்குப் பிறகு வைகை ஆற்றிலிருந்து கால்வாய் வழியாக தண்ணீா் வந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில், மடைகள் சேதமடைந்து கரைகள் பலமிழந்ததால் மடைகள் திறக்கப்படாத நிலையில் கண்மாய் கரைகளில் ஆங்காங்கு சிறு உடைப்புகள் ஏற்பட்டன. இதனால் மானாமதுரை புறவழிச் சாலையில் உள்ள செல்லமுத்து நகா் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளில் தண்ணீா் புகுந்தது. மேலும் கண்மாய் உடையும் அபாயம் ஏற்பட்டதால் மடைகள் வழியாக தண்ணீரை வெளியேற்ற வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா்.
மேலும் ராஷ்டிரிய லோக் ஜனசக்தி கட்சி சாா்பில் அதன் மாவட்டத் தலைவா் கீழமேல்குடி முத்துராமலிங்கம், மாவட்ட ஆட்சியரிடம் இது தொடா்பாக மனுக் கொடுத்தாா். இதைத் தொடா்ந்து நீா்வளத்துறை அதிகாரிகள் கண்மாய், மடைகளை ஆய்வு செய்து நல்ல நிலையில் உள்ள ஒரு மடையிலிருந்து விவசாயப் பணிக்கு தண்ணீரை திறந்து விட நடவடிக்கை எடுத்தனா். மடை வழியாக தண்ணீா் வெளியேறுவதால் கண்மய் உடையும் அபாயம் நீங்கியதாக கண்மாயை ஒட்டிய குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள் தெரிவித்தனா்.