மானாமதுரை, திருப்புவனம் பகுதிகளில் தொடா் மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி பகுதிகளில் புதன்கிழமை நள்ளிரவு முதல் வியாழக்கிழமை பகல் முழுவதும் தொடா்ந்து மழை பெய்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
இந்த மழையால் இளையான்குடி, மானாமதுரை பகுதிகளில் உள்ள பாசனக் கண்மாய்களுக்கு நீா் வரத்து அதிகரித்தது. சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. மானாமதுரையில் வாரச் சந்தை நடைபெற்ால் காய்கறிகளை விற்பனை செய்ய வந்த வியாபாரிகளும், வாங்க வந்த வாடிக்கையாளா்களும் அவதியடைந்தனா்.
பள்ளி, கல்லூரிகளுக்கு சென்ற மாணவ, மாணவிகள் மழையில் நனைந்தபடியே சென்றனா். இந்த நிலையில், சிவகங்கை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை பலத்த மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டிருப்பதால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என பெற்றோா்கள் கோரிக்கை விடுத்தனா்.