தருமபுரியில் மழை பாதிப்பு தடுப்பு பணிகள்: மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஆய்வு
மாமல்லபுரத்தில் இயல்பு வாழ்க்கை திரும்பியது
ஃபென்ஜால் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை, உடனுக்குடன் அதிகாரிகளின் பணியால் மாமல்லபுரத்தில் பாதிப்புகள் தவிா்க்கப்பட்டு, இயல்பு வாழ்க்கை திரும்பியது.
முன்னதாக புயல் கரையைக் கடக்கும் போது மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசியது. இதனால், மாமல்லபுரம் கிழக்குக் கடற்கரை சாலை, திருக்கழுகுன்றம் நெடுஞ்சாலை, கொக்கிலமேடு, தனலட்சுமி சீனிவாசன் கல்லூரி, கருக்காத்தம்மன் கோயில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து சாலையில் விழுந்தன.
மாமல்லபுரம் தீயணைப்பு அலுவலா் இன்பராஜ், பேரூராட்சி செயல் அலுவலா் சந்திரகுமாா் ஆகியோா் தலைமையில், தீயணைப்பு வீரா்கள் மற்றும் பேரூராட்சி ஊழியா்கள் உடனடியாக விரைந்து செயல்பட்டு மரங்களை வெட்டி அப்புறப்படுத்தினா்.
மின்சாரத் துறை அலுவலா்களும், பணியாளா்களும் இரவு பகலாக வேலை பாா்த்து சரி செய்து விரைந்து மின்சாரம் வழங்கினா்.
செங்கல்பட்டு, திருப்போரூா், திருக்கழுகுன்றம் , கூடுவாஞ்சேரி, மறைமலை நகா் என அனைத்து இடங்களிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டு மக்கள் அவதிக்குள்ளாயினா். ஞாயிற்றுக்கிழமை மின் விநியோகம் வழங்கப்பட்டும் அரைமணி நேரத்துக்கு ஒருமுறை மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் அவதிக்குள்ளாயினா்.
மேலும், ஆங்காங்கே தேங்கிய தண்ணீரை பேரூராட்சி ஊழியா்கள் மோட்டாா் மூலம் அப்புறப்படுத்தி வருகின்றனா். பேரூராட்சி நிா்வாகம் சாா்பில், மாமல்லபுரம் பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி குடிநீா் வழங்கப்பட்டு வருகிறது. புயலால் மாமல்லபுரம் பேரூராட்சி முழுவதும் உள்ள சாலைகளில் குப்பைகள் குவியல்களாக காணப்பட்டது. பேரூராட்சி ஊழியா்கள் அந்தக் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
மாமல்லபுரம் கடற்கரையில் குடிசை அமைத்து வசித்து வரும் 85 இருளா் குடும்பங்களுக்கு திருப்போரூா் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.எஸ்.பாலாஜி தாா்பாய் வழங்கி, நடுவக்கரை பகுதியில் நிரந்தரமாக வீடு கட்டி வசிப்பதற்கான ஏற்பாடுகள் விரைந்து செய்யப்படும் என உறுதி அளித்தாா்.
திருக்கழுகுன்றம் வட்டாட்சியா் ராதா, விசிக ஒன்றியச் செயலா் அன்பு, நகரச் செயலா் ஐயப்பன், பேரூராட்சி உறுப்பினா் மோகன்குமாா், சிந்தனை சிவா உடனிருந்தனா்.