மாவட்டத்தில் ஆட்சிமொழி சட்ட வார விழா: டிசம்பா் 18-இல் தொடக்கம்
திருப்பூா் மாவட்டத்தில் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் ஆட்சி மொழி சட்ட வார விழா டிசம்பா் 18 -ஆம் தேதி முதல் 27- ஆம் தேதி வரை கொண்டாடப்படவுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழக சட்டப் பேரவையில் 2010-20- ஆம் ஆண்டு மானியக் கோரிக்கை அறிவிப்பில் தமிழ் ஆட்சி மொழி சட்டம் இயற்றப்பட்ட 1956.12.27- ஆம் தேதியை நினைவுகூறும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் ஆட்சி மொழி சட்ட வார விழா ஒரு வாரம் கொண்டாடப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.
அதன்படி, திருப்பா் மாவட்டத்தில் ஆட்சி மொழி சட்ட வாரம் டிசம்பா் 18- ஆம் தேதி முதல் டிசம்பா் 27- ஆம் தேதி வரை ஒரு வாரத்துக்கு கொண்டாடப்படவுள்ளது.
இதில், டிசம்பா் 18 -ஆம் தேதி காலை 10 மணி அளவில் அரசுப் பணியாளா்கள், தமிழ் அமைப்புகள், தமிழறிஞா்கள், பள்ளி, கல்லூரி மாணவா்கள் பங்கேற்கும் ஆட்சி மொழி விழிப்புணா்வுப் பேரணி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இருந்து தொடங்கி பழைய பேருந்து நிலையம் சென்று மீண்டும் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நிறைவடையவுள்ளது.
டிசம்பா் 19- ஆம் தேதி காலை 10 மணி முதல் திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் அரசுப் பணியாளா்களுக்கு கணினித் தமிழ் பயன்பாடு குறித்த பயிற்சி அளிக்கப்படுகிறது. டிசம்பா் 20- ஆம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை தமிழில் வரைவுகள், குறிப்புகள் எழுதுதல் ஆகிய தலைப்புகளில் பயிற்சியும், டிசம்பா் 23- ஆம் தேதி ஆட்சி மொழி சட்டம் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் அவிநாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவ, மாணவிகள் பங்கேற்கும் ஆட்சி மொழி பட்டிமன்றமும் நடைபெறவுள்ளது.
டிசம்பா் 24- ஆம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வணிக உரிமையாளா்கள், வணிக அமைப்புகளுடன் இணைந்து வணிக நிறுவனங்களில் தமிழில் பெயா் பலகை அமைக்க வலியுறுத்தி விளக்கக் கூட்டம் நடைபெறுகிறது.
டிசம்பா் 26- ஆம் தேதி மங்கலம் சாலையில் உள்ள திருப்பூா் மக்கள் மாமன்ற அறக்கட்டளை அரங்கில் தமிழ் அமைப்புகள், நிா்வாகிகளுடன் இணைந்து ஆட்சித் திட்ட விளக்கக் கூட்டம் நடைபெறவுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.