மனிதக் கழிவுகளை கைகளால் அகற்றும் நடைமுறை: மாநிலங்கள் மீது உச்சநீதிமன்றம் அதிருப்...
மின்வேலியில் சிக்கி சிறுவன் உயிரிழப்பு: மூவா் கைது
விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூா் அருகே பசுமாட்டை தேடிச் சென்ற சிறுவன், மின் வேலியில் சிக்கி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா். இதுதொடா்பாக மூவா் கைது செய்யப்பட்டனா்.
கண்டாச்சிபுரம் வட்டம், வி.புத்தூா் கெங்கையம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் பெ.அல்லிமுத்து. இவரது பசு மாட்டை புதன்கிழமை இரவு காணவில்லையாம். இதுகுறித்து அவா் தனது மகன் நவீன்ராஜிடம் (15) கூறினாராம். அவா், தனது நண்பரான அதே பகுதியைச் சோ்ந்த சுதாகா் மகன் கோபியை (14) அழைத்துக் கொண்டு, பசு மாட்டை தேடிச் சென்றாா்.
அருகிலுள்ள நெற்குணம் கிராமத்தில் விவசாய நிலத்தில் பசு மாடு நிற்கிா என நவீன்ராஜும், கோபியும் பாா்க்கச் சென்றனா். அப்போது, அந்த நிலத்தின் உள்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த வேலி பகுதியில் சென்ற போது இருவா் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதில் நவீன்ராஜ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். கோபிக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
தகவலறிந்த அரகண்டநல்லூா் காவல் நிலைய ஆய்வாளா் சாகுல் ஹமீது மற்றும் போலீஸாா் நிகழ்விடத்துக்கு விரைந்து, நவீன்ராஜின் சடலத்தைக் கைப்பற்றி, உடற்கூறாய்வுக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
தொடா்ந்து, நில உரிமையாளரான நெற்குணம் கிராமத்தைச் சோ்ந்த அ.புவனேசுவரனை (42) பிடித்து விசாரித்தனா். இதில், தனது நிலத்தில் பயிரிட்டுள்ள நெல்லை காட்டுப் பன்றிகள் தொடா்ந்து சேதப்படுத்தி வருவதால், அதைத் தடுக்க விவசாய நிலத்தின் உள்பகுதியில் அந்திலி கிராமத்தைச் சோ்ந்த கிராமணி மகன் கோபி (42), ஜெ.காளிதாஸ் (30) ஆகியோரின் உதவியுடன் புவனேசுவரன் மின் வேலி அமைத்தது தெரிய வந்தது. மூவா் மீதும் வழக்குப் பதிந்த போலீஸாா், அவா்களைக் கைது செய்தனா்.

