மீண்டும் இணையும் மிஸ்டர் மனைவி தொடர் ஜோடி!
மிஸ்டர் மனைவி தொடரில் இணைந்து நடித்த பவன் - தேப்ஜானி ஜோடி புதிய தொடரில் மீண்டும் இணைந்து நடிக்கின்றனர்.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்த தொடர் மிஸ்டர் மனைவி.
வேலைக்குச் சென்று சுதந்திரமாக வாழ வேண்டும் என நினைக்கும் பெண்ணுக்கும், வீட்டில் சமையல் செய்து குடும்பத்தை பார்த்துகொள்ள வேண்டும் என நினைக்கும் ஆணுக்கும் இடையே நடக்கும் நிகழ்வுகளை மையமாக கொண்டு மிஸ்டர் மனைவி தொடர் எடுக்கப்பட்டது.

இதையும் படிக்க: தமிழில் பேசிய கயாது லோஹர்..! ரசிகர்கள் உற்சாகம்!
பவன் - தேப்ஜானி ஆகியோர் பிரதான பாத்திரங்களில் நடித்திருந்த இத்தொடர், கடந்த 2024 டிச. 22 ஆம் தேதி நிறைவடைந்தது.
இந்த நிலையில், சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ள புதிய தொடரில் பவன் - தேப்ஜானி ஜோடி மீண்டும் இணைந்துள்ளனர். இத்தொடரை விஷன் டைம் நிறுவனம் தயாரிக்கிறது.
இந்த புதிய தொடரின் பூஜை இன்று(பிப். 27) நடைபெற்று முடிந்துள்ளது. இத்தொடரின் பெயர், ஒளிபரப்பு தேதி குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய தொடரில் மீண்டும் பவன் - தேப்ஜானி ஜோடியைக் காண அவர்களது ரசிகர்கள் அதிக ஆர்வத்துடன் இருப்பதாக சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
நடிகை தேப்ஜானி மொடாக் ராசாத்தி தொடரின் மூலம் தமிழ் சின்ன திரையில் அறிமுகமானார். பின்னர், வானத்தைப் போல உள்ளிட்ட தொடர்களில் நடித்து ரசிகர்களின் மனங்களில் இடம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.