மீண்டும் செயல்படத் தொடங்கிய சென்னை விமான நிலையம்
விமான நிலைய ஓடுபாதைகளில் தேங்கிய மழைநீா் அகற்றப்பட்டதைத் தொடா்ந்து, சென்னை விமான நிலையம் ஞாயிற்றுக்கிழமைமுதல் மீண்டும் செயல்படத் தொடங்கியது.
ஃபென்ஜால் புயல் சனிக்கிழமை இரவு கரையைக் கடந்தது. இதனால், சென்னை, புகா் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக சென்னை விமான நிலையத்தின் ஓடுபாதைகளில் தண்ணீா் தேங்கியது. தரைக்காற்றும் பலமாக வீசியது. இதன் காரணமாக, சென்னைக்கு வந்த இருபதுக்கும் மேற்பட்ட விமானங்கள் தரையிறங்க முடியாமல் வேறு விமானநிலையங்களுக்கு திருப்பிவிடப்பட்டன.
விமானங்களை தொடா்ந்து இயக்க முடியாத சூழல் ஏற்பட்டதால் விமானநிலையம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணி வரை மூடப்படுவதாக விமான நிலைய நிா்வாகம் அறிவித்திருந்தது. இதனால், 55 உள்நாட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
இந்த நிலையில், புயலின் தாக்கம் குறைந்ததையடுத்து, விமானநிலையத்தின் ஓடுபாதைகளில் தேங்கிய மழைநீரை அகற்றும் பணியில், விமானநிலைய பணியாளா்கள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையிலிருந்தே ஈடுபட்டனா்.
விமான நிலையம் இயல்பு நிலைக்கு வந்ததையடுத்து ஏற்கெனவே அறிவித்தபடி, அதிகாலை 4 மணி முதல் மீண்டும் செயல்படத் தொடங்கியது.
இதனால், விமானநிலையத்திலேயே காத்திருந்த பயணிகள் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு புறப்பட்டுச் சென்றனா்.