மீரட் கும்பல் கைவரிசை: நிகழ்ச்சியில் பங்கேற்க அழைத்து, பாலிவுட் நடிகரை கடத்தி பணம் பறிப்பு!
மும்பையைச் சேர்ந்த காமெடி நடிகர் சுனில் பால் என்பவரை மீரட்டிற்கு காமெடி ஷோ நடத்த வருமாறு அழைத்து, அவரை அடைத்து வைத்து ரூ.7 லட்சத்தை மர்ம கும்பல் பறித்தது. அச்சம்பவம் நடந்து சில நாட்களே ஆகியிருக்கும் நிலையில், அது போன்ற மேலும் ஒரு சம்பவம் நடந்திருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. வெல்கம் உட்பட ஏராளமான படங்களில் நடித்திருக்கும் பாலிவுட் நடிகர் முஸ்தாக் கானை மோசடி கும்பல் விமான டிக்கெட் எடுத்து கொடுத்து நிகழ்ச்சி நடத்த வருமாறு அழைத்து பணம் பறித்துள்ளனர். இது குறித்து முஸ்தாக் கானின் நண்பர் சிவம் யாதவ் கூறுகையில், ``கடந்த மாதம் 20ம் தேதி மீரட்டில் நிகழ்ச்சி நடத்த வருமாறு சிலர் முஸ்தாக் கானிடம் கேட்டுக்கொண்டனர்.
இதற்காக முன்பணம் கொடுத்தனர். இதனால் முஸ்தாக் கான் டெல்லி விமான நிலையத்தில் இறங்கியபோது அவரை காரில் அழைத்துச்சென்றனர். பிஜ்னூர் என்ற இடத்தில் உள்ள ஒரு வீட்டில் அடைத்து வைத்து முஸ்தாக் கானை சித்ரவதை செய்தனர். உறவினர்களுக்கு போன் செய்து ஒரு கோடி ரூபாய் அனுப்ப சொல்லும்படி கேட்டு 12 மணி நேரம் அவரை சித்ரவதை செய்தனர்.
இறுதியில் அவரது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.2 லட்சத்தை எடுத்துக்கொண்டனர். அடுத்த நாள் காலையில் அருகில் உள்ள மசூதியில் இருந்து ஆஷான் ஓதும் சத்தம் கேட்டது. அதோடு அவரை கடத்திச் சென்றவர்கள் மது அருந்திவிட்டு குடிபோதையில் உறங்கிக்கொண்டிருந்தனர். உடனே அங்கிருந்து தப்பித்து மசூதிக்கு ஓடினார். அங்கு நடந்த சம்பவத்தை தெரிவித்தார். உடனே மசூதியில் இருந்தவர்கள் இது குறித்து போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். போலீஸார் அவரை பத்திரமாக வீட்டிற்கு அனுப்பிவைத்தனர்'' என்றார்.
இது குறித்து போலீஸார் கூறுகையில், ``முஸ்தாக் கானிடம் ராகுல் சைனி என்பவர்தான் மீரட் நிகழ்ச்சிக்கு வரும்படி கூறி, ரூ.25 ஆயிரம் முன்பணம் கொடுத்து அழைத்துள்ளார். டெல்லி விமான நிலையத்திற்கும் ராகுல்தான் கார் அனுப்பி வைத்தார்.
காரில் டிரைவருடன் மேலும் ஒருவர் இருந்தார். முஸ்தாக் கான் காரில் சென்றபோது வேறு ஒரு காருக்கு மாற்றினர். அதில் மேலும் சிலர் ஏறினர். இதனால் சந்தேகம் அடைந்த முஸ்தாக் கான் எதிர்ப்பு தெரிவித்தபோது அமைதியாக இருக்கும்படி கூறி மிரட்டினர். அதோடு முஸ்தாக் கான் மீது பெட்சீட் ஒன்றை போட்டு மூடினர். மூன்று மணி நேர பயணத்திற்கு பிறகு ஒரு வீட்டில் அடைத்து வைத்து சித்ரவதை செய்தனர்'' என்று தெரிவித்தனர். இது குறித்து போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது. போலீஸார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். சுனில் பாலை கடத்தியவர்களுக்கும் முஸ்தாக் கானை கடத்தியவர்களுக்கும் இடையே தொடர்பு இருக்கிறதா என்றும், இரண்டு சம்பவத்திலும் ஒரே கும்பல்தான் ஈடுபட்டதா என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.