செய்திகள் :

முகவரி கேட்ட நாட்களில் முகம் கொடுத்த நகரம்: 60ஸ் பெண்ணின் சென்னை நாட்கள்!

post image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்

சென்னையில், ஆரம்பத்தில் நான், என் கல்லூரி தோழி வனிதா, நிறுவனத்தில் வந்து நட்பான இரு தோழிகள் அனைவரும் விடுதியில் ஒன்றாக தங்கி இருந்தோம். முதல் வார இறுதிக்கு அவரவர் உறவினர் வீட்டுக்கு செல்வதாக திட்டம். அனைவருக்குமே சென்னை புதிது. நாங்கள் நால்வரும் சனிக்கிழமை காலை 6:00 மணிக்கே விடுதியிலிருந்து கிளம்பி பேருந்து நிறுத்தத்துக்கு வந்து விட்டோம்.

எந்த இடத்திற்கு எப்படி போக வேண்டும் என்று சரியாக தெரியாததால், வரும் பேருந்தில் விசாரித்து, விசாரித்து வனிதாவையும் இன்னொரு தோழியையும் அடுத்தடுத்து பஸ் ஏற்றிவிட்டு, பின் நானும் சுபாவும் கோயம்பேடு பஸ் ஏறி, அது கோடம்பாக்கத்திற்கும், நான் வடபழனி சென்று காஞ்சிபுரம் பஸ் ஏறவும் 2 மணி நேரம் ஆகிவிட்டது. அதனால் நான் சொல்லியிருந்த நேரத்திற்கு இரண்டு மணி நேரம் தாமதமாகத் தான் வீட்டிற்கு சென்றேன். 

சித்தி, “என்னாச்சுப்பா? ஏன் லேட்?”. 

நான், “கூட இருந்த பிரண்ட்ஸ்க்கு சென்னை தெரியாதுல்ல சித்தி… அதனால அவங்களை எல்லாம் பஸ் ஏத்தி விட்டுட்டு நான் பஸ் ஏறவும் லேட் ஆயிடுச்சு”

 சித்தப்பாக்கும் சித்திக்கும் அப்படி ஒரு சிரிப்பு. 

‘என்ன கோமாளித்தனம் பண்ணினோம் இப்ப?? ஏன் இப்படி சிரிக்கிறாங்க??’ னு நான் யோசிக்கிறேன். சிரிச்சு முடிச்சுட்டு எங்க சித்தி கேட்டாங்க.. 

“அவங்களுக்கு சென்னை தெரியாது.. சரி.. உனக்கு எவ்வளவு தெரியும்ப்பா?” 

 ‘ஆமால்ல… எனக்கும் தெரியாது தானே’..  சிரிப்பு தான் எனக்கு. இந்த சம்பவத்தை சொல்லி சொல்லி என் சீனியர்ஸ் மதனா அக்கா, ராஜா அண்ணா இருவரும் “ ‘சென்னை கைட்’ என்ன சொல்றாங்க”… “நமக்கு ஏதாச்சும் டவுட்னா ‘சென்னை கைட்’ கிட்ட கேட்டுக்கலாம்” அப்படிங்கற கிண்டல் பல நாட்கள் தொடர்ந்ததெல்லாம் சென்னை நாட்களின் தித்திப்புகளில் ஒன்று. ஆம்.. சென்னை எனக்கு அறிமுகமற்ற ஊர் என்ற உணர்வைக் கொடுத்ததே இல்லை.

எங்கும் சென்று வரவும் அஞ்சியதில்லை. டிரைனிங் முடித்து, வேலை தேடும் படலத்தில் நடந்து நடந்தும், அறிமுகமற்ற இடங்களுக்கும் ஆட்டோ அண்ணாக்களிடமும், போக்குவரத்து சிக்னல் காவல் அதிகாரிகளிடமும் விசாரித்து விசாரித்து சென்னையில் அலைந்த, சென்னையை அளந்த நாட்கள் வாழ்க்கையில் கிடைத்த நல் அனுபவங்கள்.

அடையார், ‘அனந்த பத்மநாபசுவாமி கோவில்’ தான் நாங்கள் இளைப்பாறும் இடம். எப்போதும் எங்கள் புலம்பல்களை, கவலையை, கண்ணீரை மட்டுமல்லாமல் எங்களின் சந்தோஷத்தை, குறும்புகளை, கிண்டல்களையும், ஜாலியா படுத்துகிட்டே கேட்டுக்கொண்டு எங்களைக் காத்த, உற்ற தோழன் அந்த ‘அனந்த பத்மநாபர்’. அவரைப் பார்த்துக் கொண்டே தூணில் சாய்ந்த வண்ணம் உட்கார்ந்து நேரம் போவதே தெரியாமல் அவரிடம் பேசி விட்டு வந்தால் ஒரு ஆசுவாசம்.

 கோவிலை ஒட்டி இருக்கும் மண்டபத்தில் சில நேரம் கச்சேரிகள், நடன நிகழ்ச்சிகள் எல்லாம் நடக்கும். இங்குதான் சுதா ரகுநாதன், ஜானகி அம்மா போன்றவர்களைப் பார்த்து ரசித்திருக்கிறோம். அனந்த பத்மநாபசுவாமி கோவிலின் ஒரு பக்கம் இருக்கும் அரசு நூலகமும், மறுபுறம் சிக்னல் தாண்டி இருக்கும் வாடகை நூலகமும் தான் புத்தகங்களுக்கான தேடலுக்குப் புகலிடம்.

ஆரம்பத்தில் சென்னையிலிருந்து, விடுமுறைக்கு வீட்டிற்குப் போகும் போது, டிவியில், ஏதேனும் ஒரு படத்திலோ, பாடலிலோ, சென்னையில் எங்களுக்கு பரிட்சயமான அல்லது நாங்கள் போய் வந்த இடங்களைப் பார்க்கும் பொழுது ஒரு பரவசம் வரும். பெசன்ட் நகர் எலியட் பீச்லாம் எங்க பீச் தான். பல திரைப்படங்களில் பெசன்ட் நகர் பீச், அந்த ஆர்ச், அந்த சாலை எல்லாம் வரும். முதன்முறை, அந்த மாதிரி, அடையார் பாலத்தை, அதனைச் சுற்றியுள்ள இடங்களை பார்த்த போது நானும் என் தங்கச்சியும் ஒரே உற்சாக கூச்சல்.

என் தங்கச்சி, “ஹே.. இங்க பாரு… தெரியுதா நம்ம அடையார் பாலம் தான், அதுக்கு சைட்ல ஒரு கடை இருக்கும்ல அங்கதான் எடுத்திருக்காங்க பாரு”, “ஆமால்ல”,  “ஹேய்… நம்ம பெசன்ட் நகர் பீச் பாரு” என்றெல்லாம் பேசிக் கொள்வதை பார்த்து கடுப்பாவார்கள் என் அக்காவும் தம்பியும்.

“இதுங்க ரெண்டும் வேலைப் பார்க்க தானே சென்னைக்கு போயிருக்குதுங்க… என்னமோ சென்னையை விலைக்கு வாங்கின மாதிரி “எங்க பாலம், எங்க பீச்” ன்னு இதுங்க இம்சை தாங்கல” னு கிண்டல் செய்வாங்க.

நாங்க அதையெல்லாம் கண்டுகொண்டாலும், கருத்தில் கொள்ளாமல், முடிஞ்சா இன்னும் கொஞ்சம் வெறுப்பேற்றுவதை மட்டும் செவ்வனே செய்வோம்.

ஒரு விடுமுறை தின மாலை, விடுதியில் இருந்த தோழிகள் திருவான்மியூர் பீச் போய்ட்டு வரலாம்னு திட்டமிட்டோம். ஒவ்வொருவரிடமும் சொல்லி சொல்லி 15 பேர் வரை சேர்ந்து விட்டோம். எல்லாரும் சேர்ந்து போனா ஒரு தனி சந்தோஷம் தானே. கிளம்பியதில் இருந்து ஒரே உற்சாகம் தான். எல்லா நேரமும் அப்படி அமைந்து விடுவதில்லை.

அடையார் சிக்னலில் ரோடு கிராஸ் செய்யும் பொழுது இரண்டு பசங்க கமெண்ட் “ஹே.. என்ன திடீர்னு மகளிரணி ஊர்வலம் போகுது”.. அதையும் கேட்டு சிரிச்சிட்டு, ஞாயிறு மாலையாதலால் வழக்கமான கூட்டம் இல்லாமல் காலியான பேருந்து ஏறி, எங்க ராஜ்ஜியம் தான்.. பயண தொலைவு என்னவோ வெகு குறைவு. ஆனாலும் ரொம்ப சந்தோஷமா பேசி சிரிச்சிட்டே ஒருவரை ஒருவர் கிண்டல் பண்ணிக்கிட்டே போனதெல்லாம் மறக்கவே முடியாத நினைவுகள்.

பீச்சுல நம்ம மட்டும் கால் நனைச்சு விளையாடுவதே சந்தோஷம்தான். எல்லோரும் சேர்ந்து விளையாடும் போது… அப்பப்பா அலையில் ஓடிப் பிடித்து விளையாடுவது, தண்ணீரில் கால் நனைக்க பயப்படும் தோழிகளை வேண்டுமென்றே வம்பிழுத்து, தண்ணீரில் நனைய வைத்து, என செம்ம ஜாலி பீச் மொமென்ட்ஸ்.

இரண்டு பேரில் தொடங்கி ஒரு கட்டத்தில் குறைந்தது 8 பேர் இருந்தோம். கோவில்கள், பீச், தி.நகர் ரங்கநாதன் தெரு, என்று முடிந்தவரை சேர்ந்து போவோம். மின்சார ரயிலில் கூட்டம் இல்லாத ஞாயிறுகளில் பயணிப்பதை அவ்வளவு ரசித்து அனுபவிப்போம். ரங்கநாதன் தெருவில், ஒரு மணி நேரத்தில் குறைந்த விலையில் சுடிதார் தைத்து தருவார்கள்.

மெட்டீரியல் எடுத்து அங்கேயே தைக்க கொடுத்துவிட்டு மற்ற கடைகளை ஏறி இறங்கி வேடிக்கை பார்த்து என்று நேரம் போவதே தெரியாமல் சுற்றி வந்த நாட்கள் வாழ்வின் வசந்தங்கள். 

அலுவலக விஷயமாக சென்னை வரும் அப்பாவிடம் எங்கள் அனைவருக்குமாக, எங்கம்மா கொடுத்தனுப்பும் இட்லி & வெங்காய சட்னி எங்களுக்கு தேவாமிர்தம் தான். எப்போதாவது வெளியில் சாப்பிட நினைத்தால், அடையார் சங்கீதா’ஸ் ல சாப்பிட்டுட்டு, நடந்து வந்து, ஆளே இல்லாத பஸ் ஸ்டாப் ல உட்கார்ந்து பரபரப்பில்லாமல் ஆசுவாசமாக சிறிது நேரம் பேசிவிட்டு விடுதிக்கு செல்வதெல்லாம் ஏகாந்தம் தான்.

‘ப்ராஜெக்ட் ரிவ்யூ’ விற்காக வார இறுதியில் கல்லூரிக்கு செல்ல வேண்டி இருந்தது. முதல் முறை, தனியாக சென்னையில் இருந்து ஊருக்கு வருவதால், வீட்டில் இரவு நேர பயணத்தை அனுமதிக்கவில்லை. தோழிகள் சேர்ந்துதான் வருகிறோம் என்று கூறி அம்மாவிடம் கெஞ்சி கூத்தாடி (“அம்மா…. வீட்ல வந்து இருக்கிற நேரமே ரொம்ப குறைந்து போயிடும்மா…. பயணத்திலேயே நாள் முழுக்க போய்டும்மா…. ஞாயிறு காலேஜிலேயே போயிடும்மா….. அப்புறம் எப்பம்மா நான் வீட்ல இருக்கிறது?) அப்படி இப்படின்னு பேசி அம்மாவை சரிகட்டி அப்பாவும் சரின்னு சொல்லிட்டாங்க.

9 மணி அளவில் தோழிகள் கோயம்பேடு அரசுப் பேருந்து நிலையத்தில் சந்தித்துக்கொண்டோம். பேருந்து நிலையத்தில் பெரிய அளவில் அல்ல….. சிறிய அளவில் கூட கும்பல் இல்லை.

சில நிமிட நேர இடைவெளியில் புறப்படும் அரசுப் பேருந்துகள் வரிசையாக நிற்க, நடத்துனர்கள் (“கூவி கூவி அழைப்பாங்கன்னு சொல்லுவாங்களே அது மாதிரி) திருச்சி திருச்சின்னு சொல்லி கூப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். நாங்கள், இன்னும் இருவர் வருவதற்காக காத்துக் கொண்டிருந்த அந்த இடைவெளியில் எந்த பேருந்தில் செல்லலாம் என்று விவாதித்துக் கொண்டிருந்தோம்.

“புஷ் பேக் சீட்டு இருக்கணும்… பஸ் புதுசா இருக்கணும்… முக்கியமா பஸ் ல டிவி இருக்கணும்… (நைட் ட்ராவலுக்கு பெர்மிஷன் கிடைச்சதே பெருசு.. இதுல கண்டிஷன் வேற… அவ்வளோ கொழுப்பு..)”. அந்த காலகட்டத்தில் தான் பேருந்துகளில் அதிகமாக டிவி பொருத்தப்பட்டது. அதனால டிவி இருக்கும் பேருந்துக்குதான் எப்போதும் முன்னுரிமை.

முன்னாடி ஒரு பஸ் இருந்தா கூட, ‘இல்ல இந்த பஸ்ல டிவி இல்ல அதனால அடுத்த பஸ்ல போலாம்’ னு அந்த நாட்களில் பண்ணிய அலப்பறைகள் கொஞ்ச நஞ்சமல்ல. அனைவரும் வந்தவுடன் எங்கள் எதிர்பார்ப்புக்கெல்லாம் ஒத்து வந்த ஒரு பேருந்தில் ஏறி, தோழிகளுடன் படம் பார்த்துக் கொண்டே, முதன்முறை இரவு நேர பயணம். விளக்கொளியில் மினுமினுக்கும் ஊரையும், அதிகம் பரபரப்பில்லாத பின்னிரவு நேர சாலைகளையும் வேடிக்கை பார்த்துக் கொண்டே நகரத்தைத் தாண்டுவது அருமையான அனுபவம். எங்களுக்குள் பேசி, சிரித்து உற்சாகமாக ஊர் போய்ச் சேர்ந்தோம்.

 இது நடந்த அடுத்த ஒரு வாரத்திற்குள், வார நாளில் பொங்கல் விடுமுறை வந்தது.  நிறுவனத்தில் பொங்கல் அன்று மட்டும் தான் விடுமுறை. அதுவும் வார நடுவில் என்பதால், ஒரே ஒரு நாள் மட்டும் தான் விடுமுறை.

எங்கள் வீட்டில், ஒரு நாள் என்றாலும் பரவாயில்லை பொங்கலுக்கு ஊருக்கு வந்துவிட்டு போக சொல்லிட்டாங்க. சரி.. சென்ற முறை போல கோயம்பேடு சென்று, இருக்க பஸ்ல ஏறி போய்ட்டு வந்துட வேண்டியது தானே என்று சாதாரணமாக நினைத்து விட்டேன். அலுவலகத்தில் இருந்து கிளம்பி ஏழரை மணி அளவில் கோயம்பேடு வந்து பார்த்தா….. எவ்ளோ கூட்டம்… நான் அதிர்ச்சி ஆயிட்டேன். விழாக்கால விடுமுறை நாட்களில் பேருந்து நிலையத்தின் உண்மை முகம் அன்று தான் தெரிந்தது.

‘நான்கு நாட்களுக்கு முன் இருந்த பேருந்து நிலையமா இது?’ அப்படின்னு நினைச்சுக்கிட்டே உள்ள போனா… திருச்சி பஸ் இருக்கும் இடத்திலும் கும்பல்.. திருச்சி பஸ்ஸிலும் கும்பல்..

எங்கெங்கும் கும்பல் தான். நான் முன்னாடியும் பின்னாடியும் நடந்தும், ஓடியும், ஏதாச்சும் ஒரு பஸ்ல ஒரு சீட் கிடைக்காதானு பார்க்கிறேன்… ‘இடமே இல்லை’, ‘இடமே இல்லை’ என்றார்கள் (‘கூவி கூவி அழைத்தாங்களே போன வாரம்… அப்ப கண்டிஷன் போட்டமே’ அப்படின்னு மைண்ட் வாய்ஸ் வேற டிஸ்டர்ப் பண்ணுது..) ஒன்றரை மணி நேரத்துக்கும் மேல், அப்படி ஓடி ஓடி இடம் கிடைக்குமான்னு பார்த்துட்டு இருந்தபோது, திருச்சி செல்லும் ஒரு பேருந்து கிளம்பி கொண்டிருந்தது. அங்குள்ள மக்களை ஒழுங்குப்படுத்திக் கொண்டிருந்த ஒரு பெண் காவலர் என்னைப் பார்த்துட்டு,       

“எங்கம்மா போகணும்?”

 “பெரம்பலூருக்கு”

 “டிக்கெட் புக் பண்ணலையா?”

 “சென்னைக்கு இப்பதான் வந்திருக்கேன்.. இவ்வளவு கூட்டமா இருக்கும்ன்னு எனக்கு தெரியாது மேடம்.”

 உடனே, அந்த பஸ்ல ஏறி டிரைவர் கிட்ட, 

“என்னோட சித்தி பொண்ணு தான்.. ஒரு சீட் இருக்குமா? பெரம்பலூரில் இறங்கணும்”

 அப்படின்னு சொன்ன உடனே அவரும் ஒரு நிமிஷம் யோசிச்சுட்டு,  

“சரிங்க மேடம்” அப்படின்னு முன் சீட்டை கொடுத்தார்கள். அவங்க என்னை பார்த்து “பத்திரமா போயிட்டு வா” 

 அப்படின்னு சொல்லிட்டு அவங்க வேலையைப் பார்க்க பரபரப்பாக இறங்கி போயிட்டாங்க. பஸ்ல ஏறி உட்கார்ந்ததும், சீட் கிடைத்ததும் நம்பவே முடியவில்லை என்னால்.

பத்து நிமிடத்திற்கு முன் வரை நம்ம நிலைமை என்ன இப்ப பஸ்ல உட்கார்ந்திருக்கிறோமே என்ற நினைப்பே நிம்மதியை கொடுத்தது. உண்மையிலேயே நெகிழ்வான அனுபவம். தனியாக நிற்கும் பெண்.. ‘எனக்கென்ன’ என்று போகாமல், சாதாரணமாக.. ‘இந்தப் பொண்ணுக்கு ஒரு இடம் கொடுங்க’ ன்னு சொன்னால், அந்த நாளின் கூட்டத்தில் இடம் தர மாட்டார்கள் என்று “என் தங்கை” என்று சொல்லி, என்னை சரியான சமயத்தில் எந்தவித இடைஞ்சலும், ஆபத்தும் அந்த நேரத்தில் அண்டாமல் பேருந்தில் ஏற்றி விட்ட அந்த காவலர் அக்காவை எப்போதும் மறக்க மாட்டேன்.

என்னடா நடக்குதுன்னு நான் பஸ்ல உட்கார்ந்து, ஊருக்குப் போக இடம் கிடைத்ததை, உணர்ந்து முடிக்கிறதுக்குள்ள என் கண்ணில் இருந்து மறஞ்சுட்டாங்க. தேவதைகளின் ட்ரெஸ் கோட் மாத்திட்டாங்க போல. காக்கி உடையிலும் வருகிறார்களே.

மூன்று மணிக்கு பெரம்பலூர் பஸ் ஸ்டாண்டில் போய் இறங்கிய போது அப்பாவும் சித்தப்பாவும் வந்து காத்துக்கொண்டிருந்தார்கள். இந்த நைட் டிராவல்ல இதுதான் பெரிய சங்கடம். அப்பாவின் தூக்கத்தைக் கெடுப்பது. எங்களைக் கூப்பிட மூன்று மணி, நான்கு மணிக்கு வந்து காத்திருப்பாங்க.

இறங்கின உடனே சித்தப்பா, “அதுக்குள்ள வந்துட்ட.. சூப்பர்.. உனக்கு கொஞ்சம் லக் இருக்கு போல.. நீ சொன்னதை பார்த்தா எந்த நேரம் வந்து சேருவியோனு நினைச்சேன்” னு சொன்னாங்க. அவங்க கிட்ட என்னோட புது அக்காவை பற்றி சொல்லவும் இருவரும் ஆச்சரியப்பட்டார்கள். மனதிற்குள் ஆசுவாசமும் கொண்டிருப்பார்கள். 

அடுத்த முறை கல்லூரிக்குப் போகும் பொழுது என் தோழி வனிதா, மற்ற தோழிகளிடம் “ஹே.. யாரும் சியாமளாட்ட எதுவும் வம்பு பண்ணாதீங்க… அப்புறம் அதோட புது காவலர் அக்கா வந்தாங்கன்னா லத்தி சார்ஜ் தான்” அப்படின்னு அவ்வபோது கிண்டல் பண்ற அளவுக்கு எங்களுக்கு மனசுக்கு நெருக்கமாயிட்டாங்க.

 கல்லூரி முடிக்கும் தருவாயில், வெளியில் வந்து சமூகத்தை எதிர்கொள்ளும் நேரத்தில் நல்ல நம்பிக்கையையும், நல்லெண்ணத்தையும் விதைத்த முகம் தெரியாத அந்த அக்காவுக்கு என்றென்றும் நன்றி கடன் பட்டிருக்கிறேன். தேங்க்யூ அக்கா!!

தேர்தல்