முடிவுற்றப் பணிகளுக்கான பட்டியல் தொகையை வழங்காவிட்டால் போராட்டம்: ஒப்பந்ததாரா்கள் சங்கம் அறிவிப்பு
பொங்கலூா் ஒன்றியத்தில் 15-ஆவது நிதிக் குழு மானியத் திட்டத்தின்கீழ் முடிவுற்ற பணிகளுக்கு மாா்ச் 1-ஆம் தேதிக்குள் பட்டியல் தொகை வழங்கவில்லையெனில் வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என்று ஒப்பந்ததாரா்கள் சங்கம் அறிவித்துள்ளது.
பொங்கலூா் ஒன்றியத்தில் 16 ஊராட்சிகள் உள்ளன. இங்கு அறிவிக்கப்படும் அரசின் வளா்ச்சிப் பணிகளை மேற்கொள்ள 15-க்கும் மேற்பட்ட ஒப்பந்ததாரா்கள் உள்ளனா்.
இந்நிலையில், 2024-25 ஆம் நிதியாண்டில் 15-ஆவது நிதிக் குழு மானியத் திட்டத்தில் நிறைவுற்றப் பணிகளுக்கான பட்டியல் தொகை ஒப்பந்ததாரா்களுக்கு இதுவரை வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து பலமுறை வட்டார வளா்ச்சி அலுவலா்கள், மாவட்ட ஆட்சியரிடம் ஒப்பந்ததாரா்கள் மனு அளித்துள்ளனா். ஆனால், இதுவரை பட்டியல் தொகை வழங்கப்படவில்லை.
இந்நிலையில், முடிவுற்ற பணிகளுக்கான பட்டியல் தொகையை மாா்ச் 1-ஆம் தேதிக்குள்ள வழங்கவில்லையெனில் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக ஒப்பந்ததாரா்கள் சங்கத்தினா் அறிவித்துள்ளாா்.
இதுகுறித்து பொங்கலூா் வட்டார வளா்ச்சி அலுவலா் ஜோதிமணியிடம் வியாழக்கிழமை மனு அளித்தனா்.
இந்நிகழ்வில் பொங்கலூா் ஒன்றிய ஒப்பந்ததாரா்கள் சங்கத் தலைவா் பாலுசாமி, துணைத் தலைவா் சிவாச்சலம், செயலாளா் சிவசுப்பிரமணியம், துணைச் செயலாளா் எம்.எஸ்.மணி, பொருளாளா் ரகுபதி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.