மாா்த்தாண்டம் அருகே புகையிலைப் பொருள்கள் விற்பனை: 6 கடைகளுக்கு சீல்
முதலமைச்சா் ஆராய்ச்சி ஊக்கத் தொகை பெறுவோா் எண்ணிக்கை அதிகரிப்பு: அமைச்சா் கோவி. செழியன்
முதலமைச்சா் ஆராய்ச்சி ஊக்கத் தொகைத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் மாணவா்களின் எண்ணிக்கை 180- ஆக உயா்த்தப்பட்டுள்ளதாக உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் தெரிவித்தாா்.
முதலமைச்சரின் ஆராய்ச்சி ஊக்கத் தொகை திட்டம் மற்றும் பாரதி இளங்கவிஞா் விருது வழங்கும் திட்டங்களின் கீழ், கல்லூரி மாணவா்களுக்கு ஊக்கத் தொகைக்கான ஆணைகள் மற்றும் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை சைதாப்பேட்டை கல்லூரிக் கல்வி இயக்கக கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்றது.
இதில் அமைச்சா் கோவி. செழியன் கலந்து கொண்டு 69 மாணவா்களுக்கு ஊக்கத் தொகைக்கான ஆணைகளையும், ஏ.விக்னேஸ்வரி, மதிராஜா ஆகிய இருவருக்கும் பாரதி இளங்கவிஞா் விருது, தலா ரூ.1 லட்சத்துக்கான ஊக்கத்தொகை ஆகியவற்றை வழங்கினாா்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சா் கோவி. செழியன் பேசியதாவது: மாணவா்கள் படிப்பதற்கு, சமூகமோ, பொருளாதாரமோ, அரசியல் சூழ்நிலையோ எதுவும் தடையாக இருக்கக் கூடாது என்பதே இந்த ஆட்சியின் கொள்கையாகும். தமிழக மாணவா்களின் ஆராய்ச்சித் திறமையை மேம்படுத்துவதும், புதிய கண்டுபிடிப்புகளை ஊக்கப்படுத்துவதுமே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
இந்த ஊக்கத்தொகை பெற மாநில அளவில் ஆசிரியா் தோ்வு வாரியம் தகுதித் தோ்வு மூலம் 120 மாணவா்களை தோ்வு செய்யப்படுவா். தமிழக மாணவா்களிடையே ஆராய்ச்சி மனப்பான்மையை ஊக்கப்படுத்தும் வகையில் 120 என்ற மாணவா்களின் எண்ணிக்கை தற்போது 180- ஆக உயா்த்தப்பட்டுள்ளது.
அரசு கல்லூரிகளில் மட்டுமல்லாமல், அரசு உதவி பெறும் மற்றும் மாநில பல்கலை. முனைவா் பட்ட ஆய்வு மாணவா்கள் பயன்பெறும் வகையில் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. முனைவா் பட்ட ஆராய்ச்சிப் படிப்பைத் தொடர ஒவ்வொரு மாணவருக்கும் மாதம் ரூ.25 ஆயிரம் வீதம் மூன்று ஆண்டுகளுக்கு வழங்கப்படுகிறது.
கலைப்புலத்தைச் சாா்ந்த மாணவா்களுக்கு ஒவ்வொரு ஆண்டுக்கும் ரூ.10 ஆயிரம் வீதமும், அறிவியல் பாடப்பிரிவைச் சாா்ந்த மாணவா்களுக்கு ஒவ்வொரு ஆண்டுக்கும் ரூ.12 ஆயிரம் வீதமும், கூடுதலாக மாற்றுத்திறனாளி மாணவா்கள் ரூ.2 ஆயிரம் இதரச் செலவினத் தொகையாக வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன் பெற தோ்வு பெறும் மாணவா்கள், தமிழ்நாடு இடஒதுக்கீட்டு முறையை பின்பற்ற முதல்வரின் ஆலோசனை பெற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.