முதல் டி20: டாப் ஆர்டர் சொதப்பல்; 110 ரன்களுக்கு ஆட்டமிழந்த பாகிஸ்தான்!
வங்கதேசத்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி 110 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.
பாகிஸ்தான் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி டாக்காவில் இன்று (ஜூலை 20) நடைபெற்று வருகிறது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் பந்துவீச்சைத் தேர்வு செய்ய, பாகிஸ்தான் முதலில் விளையாடியது.
டாப் ஆர்டர் சொதப்பல்; 111 ரன்கள் இலக்கு
பாகிஸ்தான் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ஃபகர் ஸமான் மற்றும் சைம் ஆயுப் களமிறங்கினர். அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. சைம் ஆயுப் 6 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். ஃபகர் ஸமான் சிறப்பாக விளையாட மறுமுனையில் விக்கெட்டுகளை இழந்து திணறியது பாகிஸ்தான்.
முகமது ஹாரிஸ் (4 ரன்கள்), கேப்டன் சல்மான் அகா (3 ரன்கள்), ஹாசன் நவாஸ் (0 ரன்), முகமது நவாஸ் (3 ரன்கள்) எடுத்து ஆட்டமிழந்தனர். தொடக்கம் முதலே நன்றாக விளையாடிய ஃபகர் ஸமான் 34 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆனார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும்.
இறுதிக்கட்டத்தில் குஷ்தில் ஷா 18 ரன்களும், அப்பாஸ் அஃப்ரிடி 22 ரன்களும் எடுத்தனர். பாகிஸ்தான் அணி 19.3 ஓவர்களில் 110 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.
வங்கதேசம் தரப்பில் டஸ்கின் அகமது 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய முஸ்தஃபிசூர் ரஹ்மான் 4 ஓவர்களில் வெறும் 6 ரன்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். மெஹிதி ஹாசன் மற்றும் தன்சிம் ஹாசன் சாகிப் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
111 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி வங்கதேசம் களமிறங்குகிறது.
இதையும் படிக்க: இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் வேகப் பந்துவீச்சாளர் சேர்ப்பு!
Pakistan, batting first in the first T20I against Bangladesh, was bowled out for 110 runs.