விழுப்புரம், கடலூரில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தீவிரம்: முதல்வர் ஸ்டாலின்
முதல் டெஸ்ட்: இங்கிலாந்து வெற்றி; தொடரில் முன்னிலை!
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 348 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் கேன் வில்லியம்சன் அதிகபட்சமாக 93 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து தரப்பில் பிரைடான் கார்ஸ் மற்றும் சோயப் பஷீர் தலா 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இங்கிலாந்து அணி அதன் முதல் இன்னிங்ஸில் 499 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் ஹாரி ப்ரூக் அதிகபட்சமாக 171 ரன்களும், கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 80 ரன்களும் எடுத்தனர். நியூசிலாந்து தரப்பில் மாட் ஹென்றி 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதையும் படிக்க: கௌதம் கம்பீரை குறுகிய காலத்தில் மதிப்பிடுவது நியாயமல்ல: முன்னாள் வீரர்
நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 254 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ரச்சின் ரவீந்திரா 84 ரன்கள் எடுத்தார். அதில் 12 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். அவரைத் தொடர்ந்து, கேன் வில்லியம்சன் அதிகபட்சமாக 61 ரன்கள் எடுத்தார்.
இங்கிலாந்து தரப்பில் பிரைடான் கார்ஸ் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். கிறிஸ் வோக்ஸ் 3 விக்கெட்டுகளையும், கஸ் அட்கின்சன் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
104 ரன்கள் இலக்கு
இரண்டாவது இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 254 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அந்த அணி இங்கிலாந்தைக் காட்டிலும் 103 ரன்கள் முன்னிலை பெற்றது. இதனையடுத்து, இங்கிலாந்து அணிக்கு 104 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
104 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணி, 12.4 ஓவர்களில் இலக்கை எட்டி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அந்த அணியில் ஜேக்கோப் பெத்தேல் அதிரடியாக விளையாடி 37 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 8 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். அவரைத் தொடர்ந்து, பென் டக்கெட் அதிகபட்சமாக 27 ரன்கள் எடுத்தார்.
இதையும் படிக்க: அடிலெய்டு டெஸ்ட்டில் மார்னஸ் லபுஷேன் வேண்டாம்: முன்னாள் ஆஸி. வேகப் பந்துவீச்சாளர்
இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.