முதல் டெஸ்ட்: தென்னாப்பிரிக்கா 382 ரன்கள் முன்னிலை!
இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி உணவு இடைவேளையின்போது, 382 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நேற்று முன் தினம் (நவம்பர் 27) டர்பனில் தொடங்கியது. இந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 191 ரன்களும், இலங்கை அணி 42 ரன்களும் எடுத்தனர்.
இதையும் படிக்க:டி20 கிரிக்கெட்டில் புதிய சாதனை; அணியில் 11 பேரும் பந்துவீச்சு!
382 ரன்கள் முன்னிலை
149 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய தென்னாப்பிரிக்க அணி, இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 132 ரன்கள் எடுத்திருந்தது. டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 17 ரன்களுடனும், கேப்டன் டெம்பா பவுமா 24 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
281 ரன்கள் என்ற வலுவான முன்னிலையுடன் மூன்றாம் நாள் ஆட்டத்தைத் தொடங்கியது தென்னாப்பிரிக்க அணி. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் டெம்பா பவுமா மற்றும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர். உணவு இடைவேளையின்போது, தென்னாப்பிரிக்க அணி 3 விக்கெட்டுகளை இழந்து 233 ரன்கள் எடுத்துள்ளது. டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 70 ரன்களுடனும், டெம்பா பவுமா 64 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
இதையும் படிக்க: வலைப் பயிற்சியில் ஷுப்மன் கில்; 2-வது டெஸ்ட்டில் விளையாடுவாரா?
தென்னாப்பிரிக்க அணி உணவு இடைவேளையின்போது, இலங்கையைக் காட்டிலும் 382 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.