முதல்முறையாக `நம்பிக்கையில்லா தீர்மானம்’ - எதிர்க்கட்சிகளிடம் பாரபட்சம் காட்டுகிறாரா ஜகதீப் தன்கர்?
சுதந்திர இந்தியாவின் நாடாளுமன்ற வரலாற்றில் முதல்முறையாக மாநிலங்களவை தலைவர் மீது எதிர்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை சமர்ப்பித்துள்ளன. குடியரசு துணைத் தலைவராகவும், மாநிலங்களவை சபாநாயகராகவும் உள்ள ஜகதீப் தன்கர் ஒரு கட்சி சார்புடனும், எதிர்கட்சிகளிடம் பாரபட்சத்துடனும் நடந்துகொள்கிறார் என்பது காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு. இந்த தீர்மானத்துக்கு சமாஜ்வாதி, திரிணமூல், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த 60 எம்.பி.க்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
பிரச்னை எங்கு தொடங்கியது?
அமெரிக்க தொழிலதிபர் ஜார்ஜ் சோரோஸால் நிதியளிக்கப்படும் ஓசிசிஆர்பி (ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் மற்றும் ஊழல் அறிக்கையிடல் திட்டம்) மற்றும் அமெரிக்க அரசாங்க இடையிலான தொடர்பை அம்பலப்படுத்தும் விதமாக பிரெஞ்சு ஊடகம் ஒன்று வெளியிட்ட செய்தியை அடிப்படையாகக் கொண்டு காங்கிரஸ் மீது பாஜக குற்றம்சாட்டியிருந்தது. இந்தியாவை அவமதிக்கும் விதமாக ஓசிசிஆர்பி அறிக்கைகளை காங்கிரஸ் பயன்படுத்துகிறது என்பது பாஜகவின் குற்றச்சாட்டு. சில அமெரிக்க நிறுவனங்கள் மற்றும் ஜார்ஜ் சோரோஸ் உடன் கைகோத்துக் கொண்டு ராகுல் காந்தி, சோனியா காந்தி உள்ளிட்டோர் நாட்டுக்கு எதிராக பேசி வருவதாகவும் பாஜக தெரிவித்தது. இதனை காந்தி குடும்பம் திட்டவட்டமாக மறுத்தது.
இந்த சோரோஸ் - சோனியா விவகாரம் குறித்து விவாதிக்குமாறு ஆளும் பாஜகவும், அதானி விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகளும் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் முடங்கின.
மாநிலங்களவையில் ஆளுங்கட்சி உறுப்பினர்களை தொடர்ந்து பேச அனுமதிப்பதாகவும், எதிர்கட்சி உறுப்பினர்கள் வழங்கி நோட்டீஸ்களை நிராகரிப்பதாகவும் காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. இதன் காரணமாகவே தன்கர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவருவதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தெரிவித்துள்ளார். மேலும், அவையில் அனுபவம் வாய்ந்த தலைவர்களை பேசவிடாமல் தன்கர் தடுக்கிறார் என்றும், பள்ளித் தலைமை ஆசிரியர் போல் செயல்படுகிறார் என்றும் அவர் குற்றம்சாட்டியிருந்தார்.
சுதந்திரத்துக்குப் பிறகு 67-வது அரசியல் சாசன பிரிவின் கீழ் மாநிலங்களவையின் தலைவருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் இத்தகைய முடிவு எடுப்பது இதுவே முதன்முறை.
மாநிலங்களவையில் பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவுடன் கூடிய தீர்மானத்தின் மூலம் குடியரசுத் துணைத் தலைவரை பதவி நீக்கம் செய்யலாம் என்றும், இதற்காக மக்களவையின் ஒப்புதலையும் பெறவேண்டும் என்றும் பிரிவு 67(பி) குறிப்பிடுகிறது. எனினும் இந்த தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு 14 நாட்கள் முன்பாகவே அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கான நோட்டீஸ் வழங்குவது அவசியம்.
மாநிலங்களவையில் மொத்தம் 245 உறுப்பினர்கள் உள்ளனர். அதில் 14 இடங்கள் காலியாக உள்ளன. பெரும்பான்மைக்கு 116 உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்னும் நிலையில் எதிர்கட்சிகள் வசம் 85 உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், பிஜு ஜனதா தளம் உள்ளிட்ட உறுப்பினர்கள் இந்த தீர்மானத்தை ஆதரித்தால் கூட எண்ணிக்கை போதாது. இதனால், இந்த தீர்மானம் தோல்வியடையவே வாய்ப்புகள் அதிகம் என்று ஆளுங்கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.
80-களின் இறுதியில் ஜனதா தளம் கட்சியின் தீவிர தொண்டராகவும், 90-களின் தொடக்கத்தில் காங்கிரஸ் கட்சியின் துடிப்பான உறுப்பினராகவும் இருந்த தன்கர், 2003-ஆம் ஆண்டு இந்த இரு கட்சிகளுக்கும் நேரெதிர் கொள்கையைக் கொண்ட பாஜகவில் ஐக்கியமானார். இதில் முந்தைய இரண்டு கட்சிகளின் சார்பாக ஒரு முறை எம்எல்ஏ, ஒரு முறை மக்களவை உறுப்பினராக வெற்றிபெற்றார்.
பாஜகவில் இணைந்த பிறகு தீவிர கட்சிப் பணிகளில் கவனம் செலுத்தி வந்த தன்கர், 2019-ஆம் ஆண்டு மத்தியில் பாஜக ஆட்சி 2-வது முறையாக அமைந்த பிறகு, மேற்கு வங்க ஆளுநராக நியமிக்கப்பட்டார். பதவியேற்ற சில நாட்களிலேயே மம்தா அரசுக்கும் தன்கருக்கும் இடையிலான மோதல் பூதாகரமாக வெடித்தது. இருவருமே நேரடியான விமர்சனங்களை முன்வைத்து வந்தனர்.
முதல்வர் மம்தா பானர்ஜி மீதான குற்றச்சாட்டுகளை எக்ஸ் தளம், பத்திரிகையாளர் சந்திப்பு என கிடைக்கும் இடங்களில் எல்லாம் முன்வைத்தார் தன்கர். இதன் காரணமாக மேற்கு வங்கத்தின் ‘உண்மையான எதிர்கட்சி தலைவர்’ என்ற அடைமொழியை திரிணமூல் காங்கிரஸ் தன்கருக்கு தந்தது.
இப்படியான சூழலில் 2022-ஆம் ஆண்டு தனது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்த அவர், பாஜக கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக களமிறங்கி அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதன் பிறகு மாநிலங்களைத் தலைவராகவும் செயல்பட்டு வரும் தன்கர் எதிர்க்கட்சிகளை ‘கதற’ வைப்பது இது முதல்முறையல்ல.
2022-ஆம் ஆண்டு குடியரசுத் துணைத் தலைவராகவும், மாநிலங்களவை தலைவராக பதவியேற்ற பிறகு தனது முதல் உரையின்போதே தேசிய நீதிபதிகள் நியமன ஆணையம் (என்ஜேஏசி) சட்டத்தை ரத்து செய்யும் உச்ச நீதிமன்றத்தின் 2015 தீர்ப்பை, நாடாளுமன்ற இறையாண்மைக்கான கடுமையான சமரசம் என்று கூறி சலசலப்பை கிளப்பினார் தன்கர்.
2023-ஆம் ஆண்டு எதிர்கட்சிகளுக்கும் மாநிலங்களவை தலைவர் ஜகதீப் தன்கருக்கும் இடையிலான மோதல் உச்சம் தொட்டது. அப்போது நாடாளுமன்ற வரலாற்றிலேயே இல்லாத வகையில் 143 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்த நீக்கத்தை ஜகதீப் தன்கர் ‘தவிர்க்க முடியாதது’ என்று ஆதரவு தெரிவித்தது எதிர்கட்சிகளிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியது.
அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம், பிரதமர் மோடியை மற்ற எம்.பி.க்களைப் போல நாடாளுமன்றத்துக்கு வருமாறு தன்னால் உத்தரவிட முடியாது, உத்தரவிடவும் மாட்டேன் என்று தன்கர் எதிர்கட்சிகளிடம் திட்டவட்டமாக தெரிவித்தார். மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மாநிலங்களவை வந்து பதிலளிக்க வேண்டும் என்று எதிர்கட்சியினரின் வலியுறுத்தலைத் தொடர்ந்து அவர் இத்தகைய கருத்தை தெரிவித்தார். இது எதிர்கட்சிகளின் கொந்தளிப்புக்கு காரணமாக அமைந்தது.
கடந்த பிப்ரவரி மாதம் ராஷ்ட்ரிய லோக் தளம் தலைவர் ஜெயந்த் சிங், காங்கிரஸ் எம்.பி ஜெய்ராம் ரமேஷ் இடையிலான வாக்குவாதத்தின் போது, ‘ஜெய்ராம் ரமேஷ் மேலவையில் இருக்கவே தகுதியற்றவர்’ என்று கடுமையான வார்த்தைகளை கூறி சலசலப்பை ஏற்படுத்தினார்.
கடந்த ஜூலை மாதம் அவையில் பேசிய தன்கர், கடந்த 25 ஆண்டுகளாக ஆர்எஸ்எஸ் அமைப்பில் ஏகலைவனாக தான் இருப்பதாகவும், அந்த அமைப்பில் இணையாதது குறித்து தான் மிகவும் வருந்துவதாகவும் கூறியது கடும் விமர்சனத்துக்குரியதாக மாறியது.
அதேபோல ஒருமுறை ராகுல் காந்தி அமெரிக்காவில் பேசியதை குறிப்பிட்டு அவையில் பேசும்போது நாட்டின் எதிரிகளின் ஓர் அங்கமாக இருப்பதாக மறைமுகமாக விமர்சித்தார் தன்கர். அவரது இதுபோன்ற நேரடியான தாக்குதல்கள் தொடர்ந்து மாநிலங்களில் கடும் விவாதத்துக்கும் அமளிக்கும் காரணமாக அமைந்து வந்திருக்கின்றன.
கடந்த ஆகஸ்ட் மாதம் கூட மாநிலங்களவை எம்.பி ஜெயா பச்சனை குறிப்பிடும்போது ஜெயா அமிதாப் பச்சன் என்று குறிப்பிட்டார். இதற்கு ஜெயா கடும் ஆட்சேபனை தெரிவித்தும் கூட கிண்டலான தொனியில் அவரை மீண்டும் அப்படியே அழைத்தது கடுமையாக விமர்சிக்கப்பட்டது. ‘நான் ஒரு நடிகை. உடல்மொழிகளை என்னால் நன்றாக புரிந்துகொள்ள முடியும். உங்களுடைய தொனி சரியாக இல்லை’ என்று ஜெயா தனது கண்டனத்தை வெளிப்படுத்தினார். அவருக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட எதிர்கட்சியினர் ஆதரவு தெரிவித்தனர்.
நடப்பு கூட்டத் தொடரில் தன்கரின் தாண்டவம் அடுத்த லெவலுக்குப் போனது. இதனால்தான், “ஜகதீப் தன்கருக்கு முந்தைய குடியரசுத் துணைத் தலைவர்கள் பாரபட்சமற்றவர்களாகவும் அரசியலுக்கு அப்பாற்பட்டவர்களாகவும் இருந்தார்கள். அவர்கள் ஒருபோதும் அரசியல் செய்யவில்லை. விதிகளின்படி சபையை நடத்தினார்கள். ஆனால், இன்று விதிகளை விட்டுவிட்டு சபையிலே அரசியல் செய்யப்படுகிறது.
கடந்த 3 ஆண்டுகளாக அவர் (ஜகதீப் தன்கர்) நடந்து கொண்ட விதம், அவர் வகிக்கும் பதவிக்கு எதிரானது. எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அவையில் 5 நிமிடம் பேசினால், சபாநாயகரே 10 நிமிடம் பேசுகிறார். எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சபையில் பேசவிடாமல் தடுக்கிறார். அரசியலமைப்பு மரபுகளை விட, ஆளும் கட்சிக்கே விசுவாசமானவராக இருக்கிறார்.
அவர் தனது அடுத்த பதவி உயர்வுக்கான அரசின் செய்தித் தொடர்பாளராக மாநிலங்களவையில் செயல்படுகிறார். பொதுவாக எதிர்க்கட்சிகளின் பாதுகாவலரே மாநிலங்களவைத் தலைவர் பதவியில் உள்ளவர்தான். ஆனால், நாடாளுமன்றத்தை முடக்கும் வகையில், மாநிலங்களவையில் குழப்பம் விளைவிப்பவராகவே தன்கர் இருக்கிறார்...” என்று புலம்பித் தள்ளினார் கார்கே.
இப்படியான தொடர் சர்ச்சைகளின் எதிரொலியால் கடந்த சில காலமாகவே தன்கருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வர எதிர்கட்சிகள் காத்திருந்தனர். அதற்காக, சூழல் இப்போது அமைந்திருப்பதாகவே தெரிகிறது.
இந்த தீர்மானம் நிறைவேறுகிறதா இல்லையா என்பது ஒருபுறம் இருந்தாலும், இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் எதிர்கட்சிகளுடன் இவ்வளவு மோதல் போக்கை கொண்டிருந்த ஒரே மாநிலங்களவை தலைவர் ஜக்தீப் தன்கராகத்தான் இருக்க முடியும் என்பது மறுக்க முடியாத உண்மை.!
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...