Army Chief: ``அமெரிக்க அதிபருக்கு கூட தெரியாது" - மாணவர்களிடம் மனம் திறந்து உரைய...
முதல்வர் பதவி வாய்ப்பை யாராவது விடுவார்களா? பிக்பாக்கெட் அடிப்பதுபோல் அடித்து விடுவார்கள்
"எடப்பாடி பழனிசாமிக்கு முன்பாக பிறந்தவர் செங்கோட்டையன் என்ற ஒரு தகுதியைத் தவிர அனைத்து தகுதிகளையும் பெற்று இறைவன் அருளால் முதலமைச்சராகவும் பொதுச் செயலாளராகவும் இருந்துள்ளார் எடப்பாடி பழனிசாமி" என்று அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியிருக்கிறார்.

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய திண்டுக்கல் சீனிவாசன் "திமுகவின் பி டீம் யார் என்பதை எடப்பாடி பழனிசாமி ஆதாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார், அதிமுகவுக்கு எதிராக செங்கோட்டையன் வழக்கு தொடரட்டும்,
ஜெயலலிதாவால் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட துரோகி டிடிவி தினகரன் சொல்வதற்கெல்லாம் நாங்கள் பதில் சொல்ல முடியாது, எடப்பாடி பழனிசாமிக்கு முன்பாக பிறந்தவர் என்ற ஒரு தகுதியை மட்டும்தான் செங்கோட்டையன் பெற்றுள்ளார், அந்த தகுதியைத் தவிர அனைத்து தகுதிகளையும் எடப்பாடி பழனிசாமி பெற்று இறைவன் அருளால் முதலமைச்சராகவும் பொதுச் செயலாளராகவும் இருந்துள்ளார்.
செங்கோட்டையனுக்கு முதல்வர் வாய்ப்பு இரண்டு முறை வந்திருந்தால் ஏன் விட்டுக் கொடுத்தார்? முதல்வர் பதவி வாய்ப்பு வந்தால் யாராவது விட்டுக் கொடுப்பார்களா? பிக்பாக்கெட் அடிப்பதுபோல் முதல்வர் பதவியை அடித்து விடுவார்கள், எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பொறுப்பேற்க வேண்டும் என்பது இறைவனின் தீர்ப்பு.
எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வருவதற்கு யாரும் பின்புலத்தில் இல்லை, ஜெயலலிதா இருக்கும்போதே முதலமைச்சராக வரவேண்டும் என செங்கோட்டையன் ஆசைப்பட்டதை அதிமுக நிர்வாகிகள் ஆதாரத்துடன் ஜெயலலிதாவிடம் தெரிவித்ததால் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது,

கொடநாடு கொலை வழக்கில் எடப்பாடி பழனிசாமியை இப்பவே பிடித்து உள்ளே போடுங்கள், நாங்களா வேண்டாம் என்கிறோம், சட்டத்தின்படி எடப்பாடி பழனிசாமி குற்றவாளியாக இருந்தால் காவல்துறை கைது செய்திருக்கலாமே? திமுகவுக்கு திராணி இருந்தால் 5 ஆண்டுகளில் இதைச் செய்திருக்கலாமே? சசிகலா, செங்கோட்டையன், ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோர் அதிமுக சட்ட விதிகளின்படியும், பொதுக்குழு முடிவின்படியும் நீக்கப்பட்டவர்கள், அவர்களை அதிமுகவில் மீண்டும் சேர்க்கவேண்டிய அவசியம் இல்லை,
சசிகலா போலவே நானும் சொல்கிறேன் வெயிட் அண்ட் சீ..., இவர்களின் வாழ்க்கை மூன்று மாதங்களில் என்ன ஆகப்போகிறது என்பதை பொறுத்திருந்துப் பாருங்கள், எடப்பாடி பழனிசாமி வசம் 75 எம்எல்ஏக்கள் உள்ளனர், சசிகலா, டிடிவி உள்ளிட்டவரிடம் ஒரு எம்எல்ஏவாது உள்ளார்களா?
2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்ததற்கு துரோகிகள் தான் காரணம், சசிகலா, டி.டி.வி போன்ற துரோகிகளால் சட்டமன்றத் தேர்தலில் தோல்வி அடைந்தோம், அதிமுகவிலுள்ளவர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி வழியில் செயல்பட்டு வருகிறோம்.

திமுக ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆயிரம் ரூபாய் கொடுத்துவிட்டு ஐயாயிரம் ரூபாயை கொள்ளை அடிக்கிறது, ஆகவே கிராமங்கள், நகரங்கள் என அனைத்து இடங்களிலும் மக்களிடம் அதிருப்தி உள்ளது, மெகா கூட்டணி அமைத்தாலும் சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற முடியாது.
இந்த ஆட்சி ஒழிய வேண்டும் என மக்கள் நினைத்து விட்டார்கள், அதிமுகவிலிருந்து பிரிந்து சென்ற துரோகிகளை எக்காரணம் கொண்டும் அதிமுகவில் சேர்க்கக்கூடாது என வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்ற முடிவில் இருக்கிறோம், துரோகிகள் நீக்கப்படுவதால் நாங்கள் பலவீனமாக இல்லை, பசும்பொன்னில் எடப்பாடி பழனிசாமியுடன் செங்கோட்டையன் வந்திருக்க வேண்டும்.
அதிமுகவில் செங்கோட்டையன் ராஜாவாக இருந்தார், ஆனால், துரோகிகளிடம் சேர்ந்து கூஜா தூக்கச் சென்றுள்ளார், பதவியில் இருந்தால் மட்டுமே மரியாதை கிடைக்கும். பதவியை விட்டுச் செல்கிறேன் என்றால் யாரும் கவலைப்பட மாட்டார்கள். அண்ணன் எப்ப போவான், திண்ணை எப்போ காலியாகும் என காத்திருப்பார்கள், அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்களுக்கு மிகப்பெரிய சக்தி வந்துள்ளது என நினைத்துக் கொண்டுள்ளனர், உண்மையில் பிரிந்து சென்றவர்களுக்கு எந்த ஒரு சக்தியும் இல்லாமல் அந்துபோய் கிடக்கிறார்கள்,
ஓபிஎஸ், சும்மா கிடந்தவர்களுக்கு மாவட்ட செயலாளர், தெருவில் கடந்தவர்களுக்கு ஒன்றியச் செயலாளர் என பதவிகளை வழங்கி வருகிறார். 2021 ஆம் ஆண்டில் 2 லட்சம் வாக்கு வித்தியாசத்தால் ஆட்சியை இழந்தோம், அதிமுகவில் வெட்டி ஆபீஸராக உள்ளவர்கள் மட்டுமே செங்கோட்டையனை நோக்கிச் செல்வார்கள், செங்கோட்டையன் எந்தக் கட்சியில் போய்ச் சேர்ந்தால் எங்களுக்கு என்ன?செங்கோட்டையனை அதிமுகவிலிருந்து நீக்கியது நூற்றுக்கு நூறு சரி, கட்சி என்றால் ஒரு டிசிப்பிளின் வேண்டும், அந்த 4 பேரும் ஒன்று சேர்ந்ததால் தென் மாவட்ட வாக்குகள் பாதிக்காது" என்றார்.













