``திருப்பரங்குன்றம் வேல் தங்களுக்கு நினைவுபடுத்தியிருக்கிறது" - ஸ்டாலினுக்கு தமி...
``முதல்வர் பதவியை வாங்க எங்களிடம் ரூ.500 கோடி இல்லை'' - கிரிக்கெட் வீரர் சித்து மனைவி
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான நவ்ஜோத் சிங் சித்து சமீப காலமாக காங்கிரஸ் நிகழ்ச்சிகள் எதிலும் கலந்து கொள்ளாமல் இருந்து வருகிறார். மக்களவை தேர்தலிலும் கூட பிரசாரம் செய்யவில்லை.
அதோடு கடந்த ஆண்டு முதல் மீண்டும் கிரிக்கெட் வர்ணனையாளராக தனது வாழ்க்கையை தொடங்கி இருக்கிறார்.
மேலும் தனது வாழ்க்கை வரலாற்று தகவல்களை பகிர்ந்து கொள்ள சொந்தமாக யூடியூப் சேனல் ஒன்றையும் தொடங்கியுள்ளார். அவரிடம் “மீண்டும் தீவிர அரசியலுக்கு வருவீர்களா?” என்று கேட்டதற்கு, “காலம்தான் பதில் சொல்லும்” என்று மட்டும் சொல்லி முடித்துவிட்டார்.
இந்நிலையில், புற்றுநோயிலிருந்து மீண்டு வந்துள்ள சித்து மனைவி நவ்ஜோத் கௌர் சித்து, தனது கணவரின் அரசியல் எதிர்காலம் குறித்து அளித்துள்ள பேட்டியில் பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

அவர் தனது பேட்டியில், “பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் சித்துவை முதல்வர் வேட்பாளராக அறிவித்தால் அவர் மீண்டும் தீவிர அரசியலுக்கு வருவார். நாங்கள் எப்போதும் பஞ்சாப்பைப் பற்றியே பேசுகிறோம். அரசியல் கட்சிகளுக்கு ரூ.500 கோடி கொடுத்து முதல்வர் பதவியை வாங்க எங்களிடம் பணம் இல்லை. ஆனால் எங்களால் பஞ்சாப்பை தங்க மாநிலமாக மாற்ற முடியும்” என்றார்.
உங்களிடம் முதல்வர் பதவிக்கு யாராவது பணம் கேட்டார்களா? என்று கேட்டதற்கு,
“எங்களிடம் யாரும் பணம் கேட்கவில்லை. ஆனால் ஒரு நபர் ரூ.500 கோடி இருந்த சூட்கேஸ் கொடுத்து முதல்வராகி இருக்கிறார். ஆனால் எங்களிடம் பணம் இல்லை.

அதே சமயம், சித்துவிடம் அதிகாரத்தை கொடுத்தால் பஞ்சாப்பை மேம்படுத்துவார். எங்களிடம் எந்தக் கட்சிக்கும் கொடுக்க பணம் இல்லை. காங்கிரஸ் கட்சியில் ஏற்கனவே உட்கட்சி சண்டை இருக்கிறது. காங்கிரஸ் கட்சியில் 5 முதல்வர் வேட்பாளர் முகங்கள் இருக்கின்றன. அவர்கள் சித்துவை முன்னுக்கு வரவிடமாட்டார்கள்” என்றார்.
பா.ஜ.க சித்துவிற்கு பொறுப்புகள் கொடுத்தால் அவர் பா.ஜ.கவில் சேருவாரா? என கேட்டதற்கு, பதிலளிக்க அவர் மறுத்துவிட்டார்.
முன்னதாக, நவ்ஜோத் கௌர் தலைமையிலான குழு மாநில ஆளுநர் குலாப் சந்தை சந்தித்து, மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டு இருப்பது குறித்து மனு கொடுத்தது.

















