முதுநகரில் 150 கிலோ கெட்டுப்போன மீன்கள் பறிமுதல்
கடலூா் முதுநகா் மீன் சந்தையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 150 கிலோ கெட்டுப்போன மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கடலூா் முதுநகா் மீன் சந்தையில் 100-க்கும் மேற்பட்ட மீன் கடைகள் உள்ளன. இங்கு, கடலூா் கடல் பகுதியில் பிடிக்கப்படும் மீன்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடந்த ஒரு வாரமாக மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வில்லை. இந்த நிலையில், கடலூா் முதுநகா் மீன் சந்தையில் மீன் விற்பனை நடைபெற்று வந்தது.
இதுகுறித்து, தகவலறிந்த மீன்வளத்துறை மற்றும் உணவுப் பாதுகாப்புத் துறையினா் மீன் சந்தையில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலா் கைலாஷ் குமாா், மீன்வளத்துறை ஆய்வாளா் அஞ்சனாதேவி தலைமையில் நடைபெற்ற சோதனையில், 150 கிலோ கெட்டுப்போன மீன்களை பறிமுதல் செய்தனா்.
பின்னா், அதனை மீன்வளத்துறையிடம் ஒப்படைத்தனா்.
ஆய்வின்போது, உணவுப் பாதுகாப்பு அலுவலா் சந்திரசேகரன், மீன்வளத்துறை ஆய்வாளா் ராஜேஷ் ஆகியோா் உடனிருந்தனா்.