முன்பெல்லாம் வெள்ள அபாயம்.. தற்போது செல்ஃபி அபாயம்! காவல்துறை எச்சரிக்கை
தாமிரபரணி என அழைக்கப்படும் தாமிரவருணி ஆற்றில் நின்று யாரும் செல்ஃபி எடுக்கவோ வேடிக்கை பார்க்கவோ வர வேண்டாம் என ஒலிப்பெருக்கி மூலம் காவல்துறையினர் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்து வருகிறார்கள்.
முன்பெல்லாம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படப்போகிறது என்று மக்களுக்கு அபாய எச்சரிக்கை விடுக்கப்படும். ஆனால் தற்போது வெள்ளம் அதுவழியில் சென்றாலும் செல்ஃபி மோகத்தில் மக்கள் வெள்ளத்தில் சிக்கிக்கொள்வதால் காவல்துறையினர் செல்ஃபி அபாய எச்சரிக்கை விடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
நெல்லை மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
மூன்றாவது நாளாக இன்றும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கை காண்பதற்காக, சுலக்சனா முதலியார் மேம்பாலத்தில் நின்று ஏராளமான பொதுமக்கள் செல்ஃபி எடுப்பதுடன், இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு வேடிக்கைப் பார்த்து வருகின்றனர்.
இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனைத் தொடர்ந்து அங்குப் பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் மக்கள் யாரும் வேடிக்கை பார்க்க வர வேண்டாம் என்றும் ஆற்றங்கரையோரம் நின்று செல்ஃபி எடுக்கவோ புகைப்படம் எடுக்கவோ கூடாது என்றும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு அதிகரிக்க கூடும். அதனால் அனைவரும் கலைந்து செல்லுங்கள் என்று ஒலிப்பெருக்கிகள் மூலம் அறிவுறுத்துகின்றனர்.
இதுபோல் ஆற்றங்கரையோரம் பகுதி முழுவதும் காவல்துறையினரும் மாவட்ட நிர்வாகித்தினரும் தொடர்ந்து பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.