Doctor Vikatan: காலை உணவைத் தவிர்த்தால் ஈஸியாக உடல் எடை குறையும் என்பது உண்மையா?
மும்பை: காவல் நிலைய வளாகத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட இளம்பெண்; காவலர் கைது!
மும்பை அருகில் போலீஸில் வாக்குமூலம் கொடுக்க வந்த பெண்ணை வாக்குமூலம் வாங்கிய கான்ஸ்டபிள் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மும்பை அருகில் உள்ள பால்கர் என்ற இடத்தில் இருக்கும் காசா காவல் நிலையத்தில் 21 வயது பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை புகார் கொடுத்திருந்தார். அப்பெண்ணுக்குத் திருமணமான ஒருவருடன் தகாத உறவு இருந்தது. இது அவர்களுக்குள் கருத்து வேறுபாட்டை ஏற்படுத்தியதால் அந்த நபர் மீது 21 வயது பெண் பாலியல் வன்கொடுமை புகார் கொடுத்திருந்தார்.
இது குறித்து விசாரிப்பதற்காக இரண்டு பேரையும் போலீஸார் வரவழைத்து இருந்தனர். அப்பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்தவர் தனது மனைவியையும் அழைத்து வந்திருந்தார். காவல் நிலையத்தில் மூன்று பேரும் சந்தித்துக்கொண்டபோது, அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில் கான்ஸ்டபிள் ரஞ்சித் (41) தலையிட்டு அவர்களை சமாதானப்படுத்தினார். இதையடுத்து அடுத்த நாள் வாக்குமூலம் கொடுக்க வரும்படி 21 வயது பெண்ணிடம் ரஞ்சித் கேட்டுக்கொண்டிருந்தார்.
அப்பெண் காவல் நிலையத்திற்கு வந்தபோது அவரிடம் நயமாக பேசி அவரைக் காவல் நிலையத்திற்கு பின்புறம் இருந்த கான்ஸ்டபிள்கள் அறைக்கு, ரஞ்சித் அழைத்துச் சென்றார். அங்கு வைத்து அப்பெண்ணை ரஞ்சித் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டார். இதையடுத்து அப்பெண் கொடுத்த புகாரின் பேரில் ரஞ்சித் கைதுசெய்யப்பட்டுள்ளதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் தேஷ்முக் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட பெண் வாக்குமூலம் கொடுக்க வந்தாரா அல்லது விசாரணை குறித்து தெரிந்துகொள்ள வந்தாரா என்பது குறித்து விசாரித்து வருவதாக தேஷ்முக் தெரிவித்தார்.
சம்பவம் நவம்பர் 26-ம் தேதி நடந்துள்ளது. ஆனால் வழக்கு டிசம்பர் 8-ம் தேதி பதிவுசெய்யப்பட்டுள்ளது. இந்த அளவுக்கு தாமதம் ஏற்பட்டதற்கான காரணம் குறித்தும் விசாரித்து வருவதாக போலீஸார் தெரிவித்தனர். விசாரணை பாரபட்சம் இன்றி நடைபெற வழக்கு வேறு காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. அதோடு காசா காவல் நிலைய பொறுப்பாளரும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.



















