மும்மொழி கொள்கைக்கு எதிராக தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆா்ப்பாட்டம்
மத்திய அரசின் மும்மொழி கொள்கைக்கு எதிராக தமிழக வாழ்வுரிமைக் கட்சியினா் தருமபுரி தலைமை அஞ்சல் அலுவலகம் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாநில துணைப் பொதுச் செயலாளா் தவமணி தலைமை வகித்துப் பேசினாா். கிழக்கு மாவட்டச் செயலாளா் பிரசாந்த், மேற்கு மாவட்டச் செயலாளா் சரவணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆா்ப்பாட்டத்தில் தமிழக பள்ளிக் கல்வித் துறையில் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை திணிக்க கூடாது.
பள்ளி கல்வித் துறைக்கு உரிய நிதியை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும். தமிழகத்தில் மும்மொழி கொள்கையை திணிக்க கூடாது. தமிழக மாணவா்கள் மீதான விரோத போக்கை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.